சமூக வலைதளங்களில் பிரச்சாரம் செய்தாலும் கண்காணிப்பு... தேர்தல் ஆணையம் கெடுபிடி!

 

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் இப்போதில் இருந்தே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. நேரடி கூட்டங்கள் மட்டுமல்லாமல்  சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் பிரச்சாரம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக பேஸ்புக் போன்ற தளங்களில் அரசியல் தலைவர்கள் குறித்து லட்சக்கணக்கான கருத்துகள் பதிவாகி வருகின்றன. தேர்தல் அதிகாரிகள்  அவற்றை கண்காணித்து வருவதாக கூறியுள்ளனர்.  

இதனால் தேர்தல் தொடர்பான பதிவுகள், ஓட்டு கேட்டு வெளியிடப்படும் தகவல்கள், செல்போன் குறுஞ்செய்திகள் போன்றவற்றை கண்காணிக்க புதிய மீடியா கண்காணிப்பு பிரிவு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பிரிவு சமூக வலைத்தளங்களில் வெளியாகும் பதிவுகள் மற்றும் விதிமுறை மீறல்களை பதிவு செய்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பும் வகையில் செயல்படும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தவுடன் பறக்கும் படைகள் மற்றும் மீடியா குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று தெரிவித்தனர். மேலும் 24 மணி நேர கண்காணிப்பு மையமும் அமைக்கப்படும் என்றும், சமூக வலைத்தளங்கள் மற்றும் செல்போன் மூலம் அனுப்பப்படும் அரசியல் பிரச்சாரங்களும் தேர்தல் செலவுக் கணக்கில் சேர்க்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.