18-ம்படி கருப்பண்ணசாமி கோயிலில் சூர்யா - ஜோதிகா நேர்த்திக்கடன் வழிபாடு!
திரையுலகின் நட்சத்திரத் தம்பதிகளான நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா ஆகியோர், மதுரை மாவட்டம் மேலூர் அருகே அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற அருள்மிகு அழகர்கோவிலில் இன்று திடீர் விஜயம் செய்து, தங்களது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், சூர்யா மற்றும் த்ரிஷா நடிப்பில் அண்மையில் மே 15 அன்று வெளியாகி, தற்போது உலக அளவில் ரூ. 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்து மெகா பிளாக்பஸ்டர் சாதனையைப் படைத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் 'கருப்பு'. இந்தத் திரைப்படத்தில், நீதிமன்ற அமைப்பில் உள்ள ஊழல்களை ஒழிப்பதற்காக வக்கீல் வேடத்தில் வரும் மனித ரூபத்தில், காவல் தெய்வமான 'வேட்டை கருப்பண்ணசாமி'யின் அவதாரமாகவே சூர்யா மிரட்டியிருப்பார். படத்தின் இந்த இமாலய வெற்றியைத் தொடர்ந்து, அழகர்கோவிலின் மிக சக்திவாய்ந்த காவல் தெய்வமாக வீற்றிருக்கும் 18-ம் படி கருப்பண்ணசாமிக்கு நன்றி செலுத்தும் வகையில் இந்த பயணம் அமைந்துள்ளது.
Karuppu | Suriya | Jyothika | 18ம் படி கருப்பண்ண சாமி கோயிலுக்கு குடும்பத்துடன் வந்த நடிகர் சூர்யா | ரசிகர்களுடன் அன்பாக பேசிய ஜோதிகா #karuppu #suriya #jyothika #thanthitv pic.twitter.com/fAsIR5RyoP
— Thanthi TV (@ThanthiTV) June 1, 2026
சூர்யா, தனது மனைவி ஜோதிகா மற்றும் தனது தங்கை ஆகியோருடன் சன்னதிக்கு வந்து, கருப்பண்ணசாமிக்கு 48 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட மாலையை அணிவித்தும், பட்டு வஸ்திரங்களைச் சாத்தியும் தங்களது நேர்த்திக்கடனை பக்திப் பரவசத்துடன் நிறைவேற்றினர்.
சூர்யா மற்றும் ஜோதிகாவின் இந்தத் திடீர் வருகையைச் சற்றும் எதிர்பாராத அழகர்கோவில் நிர்வாகத்தினர் அவர்களுக்குச் சிறப்பு வரவேற்பு அளித்தனர். அதே வேளையில், சூர்யா கோயிலுக்கு வந்துள்ள தகவல் காட்டுத்தீ போலப் பரவியதால், மேலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அங்குத் திரண்டனர்.
சன்னதியில் சாமி தரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்த சூர்யா - ஜோதிகா தம்பதியை நோக்கி ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். 'கருப்பு' படத்தின் மாபெரும் வெற்றிக்காகவும், சூர்யாவின் அசாத்திய நடிப்புக்காகவும் அங்குத் திரண்டிருந்த ஏராளமான ஆன்மீகப் பக்தர்களும், ரசிகர்களும் தம்பதியருக்குத் தங்களது மனமார்ந்த வாழ்த்துகளை முழக்கமிட்டுத் தெரிவித்தனர்.