அலிசா அப்துல்லா குறித்து ஆபாச பேச்சு - திருச்சி சூர்யா சிவா கைது - யூடியூபர் முக்தாருக்கு வலைவீச்சு!
பாஜக மாநில நிர்வாகியும், பிரபல கார் பந்தய வீராங்கனையுமான அலிசா அப்துல்லா மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்துச் சமூக ஊடகங்களில் ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசிய புகாரில், அதிமுக பிரமுகர் திருச்சி சூர்யா சிவா போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சில தினங்களாகவே யூடியூப் நேர்காணல்கள் மற்றும் சமூக ஊடகப் பக்கங்களில் அலிசா அப்துல்லா மற்றும் அவரது பச்சிளம் குழந்தைகளை மையப்படுத்தி, திருச்சி சூர்யா சிவா மற்றும் யூடியூபர் முக்தார் ஆகியோர் மிகவும் அநாகரீகமான முறையில் ஆபாசக் கருத்துக்களைப் பேசி வீடியோ வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பாஜக பிரமுகர் அலிசா அப்துல்லா, நேற்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு நேரில் சென்று கண்ணீர் மல்க அதிரடிப் புகார் ஒன்றை அளித்தார். பொதுவெளியிலும் சமூக ஊடகங்களிலும் பெண்களையும், குறிப்பாகப் பச்சிளம் குழந்தைகளையும் இழிவுபடுத்திப் பேசும் இதுபோன்ற நபர்கள் மீது சட்டம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தங்களுக்கு உரியப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் காவல்துறையிடம் உருக்கமாக வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அலிசா அப்துல்லா அளித்த புகாரின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, உடனடியாகச் செயல்பட்ட சென்னை சைபர் க்ரைம் போலீசார் திருச்சி சூர்யா சிவா மற்றும் யூடியூபர் முக்தார் ஆகியோர் மீது பெண்களை இழிவுபடுத்துதல், ஆபாசமாகப் பேசுதல் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
வழக்குப் பதிவு செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே தீவிரத் தேடுதல் வேட்டையில் இறங்கிய தனிப்படை போலீசார், இன்று காலை திருச்சி சூர்யா சிவாவை அதிரடியாகக் கைது செய்தனர். தற்பொழுது அவரிடம் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள யூடியூபர் முக்தாரைப் போலீசார் வலைவீசித் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.