கள்ளநோட்டு மாற்ற முயன்ற தவெக பிரமுகர் கைது!
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பகுதியில், புதிய இருசக்கர வாகனம் வாங்குவதற்காகக் கள்ளநோட்டுகளைக் கொடுக்க முயன்ற தமிழக வெற்றிக் கழக பிரமுகரை போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்தச் சம்பவம் தர்மபுரி மாவட்ட அரசியல் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அடுத்த பிக்கல் நாயக்கன் அள்ளி பகுதியைச் சேர்ந்தவர் அங்கமுத்து. தவெக பிரமுகரான இவர், நேற்று பிற்பகலில் மாரண்டஅள்ளி பகுதியில் உள்ள ஒரு பிரபல இருசக்கர வாகன ஷோரூமிற்குப் புதிய வண்டி வாங்குவதற்காகச் சென்றுள்ளார். அங்கு வாகனத்திற்கான முன்பணமாக மொத்தம் 31,500 ரூபாயைச் செலுத்தியுள்ளார். அவர் கொடுத்த பணத்தை ஷோரூம் ஊழியர்கள் இயந்திரத்தில் வைத்துச் சரிபார்த்தபோது, அதில் இருந்த சில நோட்டுகள் கள்ளநோட்டுகள் என்பது தெரியவந்தது. அவர் செலுத்திய தொகையில், 19 எண்ணிக்கையிலான 500 ரூபாய் நோட்டுகள் கள்ளநோட்டுகள் என்பதை ஊழியர்கள் கண்டுபிடித்தனர்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஷோரூம் மேலாளர், உடனடியாக மாரண்டஅள்ளி காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அங்கமுத்து வைத்திருந்த கள்ளநோட்டுகளைப் பறிமுதல் செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
ஷோரூம் நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில், கள்ளநோட்டுகளைப் புழக்கத்தில் விட முயன்றதாக வழக்குப்பதிவு செய்த போலீசார், நேற்று இரவே அங்கமுத்துவைக் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, தர்மபுரி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் இவருக்குப் பின்னணியில் கள்ளநோட்டு கும்பல் ஏதேனும் செயல்படுகிறதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.