கொளத்தூர் MLA பாபுவின் மரணத்தில் சந்தேகம்... சமூக ஆர்வலர் பரபரப்பு புகார்!
சென்னை கொளத்தூர் தொகுதி தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு (75) காலமான நிலையில், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பான அனைத்து மருத்துவ ஆவணங்களையும் பாதுகாக்க வேண்டும் என்றும் கோரிச் சமூக ஆர்வலர் ஜி. தேவராஜன் காவல்துறையில் ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி நள்ளிரவு ஏற்பட்ட திடீர் மூச்சுத்திணறல் மற்றும் நுரையீரல் தொற்று காரணமாகச் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் (எம்.ஜி.எம். ஹெல்த்கேர்) வி.எஸ். பாபு அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 72 நாட்களாகப் பல்துறை மருத்துவ நிபுணர்களின் தீவிரக் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று பிற்பகல் 2.24 மணியளவில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
வி.எஸ். பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல் சுமார் இரண்டு மாதங்களாக அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகமோ, அரசோ எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, கொளத்தூர் தொகுதி செம்பியம் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஜி. தேவராஜன் என்பவர், மக்கள் பிரதிநிதியின் உடல்நிலை குறித்து சட்டப்படி வெளியிடக்கூடிய தகவல்களைப் பொதுமக்களுக்குத் தெரிவிக்க உத்தரவிடக் கோரி நேற்று முன் தினம் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்ட அடுத்த நாளே வி.எஸ். பாபு உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவரது மரணத்தின் பின்னணியில் ஏதேனும் சதிச் செயல் நடந்திருக்கலாம் என சந்தேகம் தெரிவித்து தேவராஜன் காவல்துறையில் ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார்.
வி.எஸ். பாபுவுக்குக் கடந்த 72 நாட்களாக என்னென்ன சிகிச்சைகள் அளிக்கப்பட்டன என்பது தொடர்பான அனைத்து மருத்துவ அறிக்கைகள் மற்றும் ஆவணங்களையும் முறையாகப் பாதுகாத்து வைத்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என அவர் தனது புகாரில் வலியுறுத்தியுள்ளார்.
மறைந்த எம்.எல்.ஏ. வி.எஸ். பாபுவின் உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், சமூக ஆர்வலர் அளித்துள்ள இந்தப் புகார் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.