பள்ளி நீச்சல் உடைகளை ஆன்லைனில்  விற்பனை செய்யத் தடை!  

 

ஜப்பானில் செயல்பட்டு வரும் முன்னணி ஆன்லைன் விற்பனை நிறுவனமான மெர்காரி பள்ளி குழந்தைகள் மற்றும் மாணவர்கள் பயன்படுத்திய நீச்சல் உடைகளை விற்பனை செய்யக்கூடாது என்று புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தனிப்பட்ட விற்பனையாளர்கள் புதிய மற்றும் பயன்படுத்திய பல்வேறு வகையான பொருட்களை விற்பனை செய்யும் இந்த சந்தையில் இந்த திடீர் தடை உத்தரவு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆடைகள் எப்போதாவது மட்டுமே அணியப்படுவதால் நல்ல நிலையிலேயே இருக்கும் என்றாலும், குழந்தைகள் வளர்ந்துவிடுவதால் சிக்கனமான குடும்பங்கள் இவற்றை விற்க ஆன்லைன் தளங்களைப் பயன்படுத்தி வந்தனர்.

ஜப்பான் பள்ளிகளில் உடற்கல்வி பாடமாக நீச்சல் கற்றுக் கொடுக்கப்படுவதுடன், அதற்காக அணியும் உடையை 'ஸ்கூல் மிசுகி' என்று ஜப்பானிய மொழியில் அழைக்கிறார்கள். இந்த உடைகள் பொதுவாகக் கருப்பு மற்றும் அடர் நீல நிறத்தில் எளிய முறையில் வடிவமைக்கப்படுவதுடன், சிறுமிகளுக்கு 'ஒன்-பீஸ்' உடைகளும் சிறுவர்களுக்கு அரைக்கால் சட்டைகளும் வழங்கப்படுகின்றன. மேலும், மாணவர்களின் பெயர்களை எழுதுவதற்கான இடமும் சில பள்ளிகளின் சின்னங்களும் இந்த ஆடைகளில் அச்சிடப்பட்டிருப்பது இதன் தனிச்சிறப்பாகும்.

மொத்தத்தில் பள்ளி நீச்சல் உடைகள் நாகரிகத்தை விடப் பயன்பாட்டிற்கே அதிக முன்னுரிமை அளித்து உருவாக்கப்படுவதால் வேறு எந்த இடங்களிலும் இவற்றை அணிவதைப் பார்க்க முடியாது. இதுபோன்ற காரணங்களால் இந்த ஆடைகளின் விற்பனைக்கு ஆன்லைன் நிறுவனம் கடந்த ஆகஸ்டு 3-ந் தேதி முதல் தடை விதித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.