“மலைப்பகுதியில் மோதி நொறுங்கிய சிறிய விமானம்... சுவிட்சர்லாந்தில் 3 பேர் பலி”
சுவிட்சர்லாந்தில் சிறிய ரக விமானம் மலைச்சரிவில் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 3 பேரும் உயிரிழந்தனர்.சுவிட்சர்லாந்தின் வலேஸ் மாகாணத்தில் உள்ள லியூகெர்பாட் அருகே இந்த விபத்து நடைபெற்றுள்ளது. ஒற்றை என்ஜின் கொண்ட Cirrus SR22T ரக சிறிய விமானம் விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
allowfullscreen
இந்த விமானம் லுகானோ நகரில் இருந்து புறப்பட்டு, சியோன் விமான நிலையத்தில் சிறிது நேரம் நின்ற பின்னர் புறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பின்னர் மத்திய சுவிட்சர்லாந்தில் உள்ள புச்சஸ் விமான நிலையத்தை நோக்கி சென்றபோது, லியூகெர்பாட் அருகே மலைப்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.விமானம் மலைச்சரிவில் மோதியதைத் தொடர்ந்து அப்பகுதியில் புகை எழுந்ததை பார்த்தவர்கள் அவசர சேவைகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து 3 ஹெலிகாப்டர்கள் மற்றும் மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆனால் விமானத்தில் இருந்த 3 பேரும் உயிரிழந்துவிட்டதை மீட்புக் குழுவினர் உறுதி செய்தனர்.உயிரிழந்தவர்களில் இருவர் பிரிட்டன் நாட்டவர்கள் என அந்நாட்டு வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது. மூன்றாவது நபரின் அடையாளம் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் ஆரம்பகட்டத்தில் வெளியிடப்படவில்லை.விமான விபத்துக்கான காரணம் குறித்து சுவிட்சர்லாந்து பாதுகாப்பு விசாரணை அமைப்பும், அந்நாட்டு அதிகாரிகளும் விசாரணையை தொடங்கியுள்ளனர். காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.