சிரியாவில் கனமழை வெள்ளம்: 5 குழந்தைகள் உட்பட 7 பேர் பலி ... உறைய வைக்கும் வீடியோ!

 

 

மேற்கு ஆசிய நாடான சிரியாவில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு மாகாணங்களில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் 5 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 7 பேர் காயமடைந்துள்ளதுடன், 4 பேரைக் காணவில்லை என அந்நாட்டு அவசரகால மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ராயித் அல்-சாலே தெரிவித்துள்ளார்.

ரக்கா, டெய்ர் அல்-சோர், ஹசாகா உள்ளிட்ட கிழக்குப் பகுதிகளிலும், அலெப்போ மாகாணத்தின் சில பகுதிகளிலும் வெள்ளம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளநீர் தேங்கிய பகுதிகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

மீட்புப் பணிகள் தீவிரம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இதுவரை 550-க்கும் மேற்பட்ட அவசரகால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வெள்ளத்தில் சிக்கிய வாகனங்களில் இருந்த 60 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், இரண்டு பள்ளிகளில் இருந்த 350-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். ரக்கா மாகாணத்தில் முகாம்களில் தங்கியிருந்த 375 குடும்பங்களும் வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகளும் சேதமடைந்துள்ளதால் பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களைத் தேடும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.