டி20 கிரிக்கெட் அணியில் இடம் கிடைக்கல... உருக்கமான கடிதம் எழுதி கல்லூரி மாணவி தற்கொலை ! 

 

சென்னையில் ஜி.எஸ்.டி. கண்காணிப்பாளராகப் பணியாற்றி வரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த காஷ்மீர்குமார் என்பவரின் மகள் ஏஞ்சல் கங்கவாணி (19). இவர் புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. 2ம் ஆண்டு படித்து வந்தார். கிரிக்கெட் விளையாட்டின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், அங்குள்ள ஒரு அகாடமியில் சேர்ந்து தீவிரப் பயிற்சி பெற்று வந்தார்.

இந்நிலையில், சமீபத்தில் அறிவிக்கப்பட்ட டி20 கிரிக்கெட் போட்டிக்கான வீராங்கனைகள் பட்டியலில் ஏஞ்சல் கங்கவாணியின் பெயர் இடம்பெறவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அவர் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனையில் இருந்து வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஏஞ்சல் தனது பயிற்சியாளர் கதிர்வேலைத் தொடர்புகொள்ள முயன்றுள்ளார். பயிற்சியாளர் பின்னர் அவரை அழைத்தபோது ஏஞ்சல் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த பயிற்சியாளர் அவர் தங்கியிருந்த வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, ஏஞ்சல் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நடத்திய சோதனையில், ஏஞ்சல் கைப்பட எழுதிய உருக்கமான கடிதம் ஒன்று சிக்கியது. அதில் ஆங்கிலத்தில், "என் வாழ்க்கை இவ்வளவு நாள் தான் என்பது கடவுள் எழுதி வைத்தது. என் மரணத்திற்கு நான் தான் காரணம். வேறு யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. அம்மா, அப்பா உங்களை மிஸ் செய்கிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

மாணவியின் செல்போன் லாக் செய்யப்பட்டுள்ளதால், அதன் பின்னணியில் உள்ள காரணங்களைக் கண்டறிய சைபர் கிரைம் போலீசாரின் உதவி நாடப்பட்டுள்ளது. அவர் கிரிக்கெட் போட்டியில் தேர்வாகாத விரக்தியில் இந்த முடிவை எடுத்தாரா அல்லது பெற்றோர் அருகில் இல்லாத ஏக்கத்தில் தற்கொலை செய்துகொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வளர்ந்து வரும் இளம் வீராங்கனையின் இந்த விபரீத முடிவு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.