தாஜ்மஹாலைச் சுற்றிவளைத்த 500 குரங்குகள்... அலறியடித்து ஓடிய சுற்றுலாப் பயணிகள்... வைரல் வீடியோ!
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் வளாகத்தை நூற்றுக்கணக்கான குரங்குகள் கூட்டமாக ஆக்கிரமித்துள்ளதால், அங்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் கடும் பீதியடைந்துள்ளனர். நேற்று தாஜ்மஹாலின் கிழக்கு, மேற்கு மற்றும் ராயல் நுழைவாயில்களைச் சுற்றியுள்ள புல்வெளிப் பகுதிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குரங்குகள் கூட்டமாக சுற்றித் திரிந்தன.
பயணிகளின் கைகளில் உள்ள உணவுப் பொருட்கள் மற்றும் பைகளைப் பறிப்பதற்காகக் குரங்குகள் ஆக்ரோஷமாகத் துரத்தியதால், அதிர்ச்சியடைந்த பயணிகள் நாலாபுறமும் அலறியடித்து ஓடினர்.தாஜ்மஹால் உள்ளே உணவுப் பொருட்களைக் கொண்டு செல்லத் தடை இருப்பதால், பயணிகள் நுழைவாயில் குப்பைத் தொட்டிகளில் உணவை வீசிவிட்டுச் செல்கின்றனர். இதனைத் தேடி வரும் குரங்குகள் அங்கு முகாமிட்டுள்ளன.
கடந்த ஜூலை மாதம் தென் கொரியப் பெண் சுற்றுலாப் பயணி ஒருவரும், செப்டம்பர் மாதம் 83 வயது பிரேசில் முதியவர் உட்பட இருவரும் குரங்குகள் கடித்துக் காயமடைந்தனர்.குரங்குகளின் அட்டகாசத்தைக் கட்டுப்படுத்தப் பாதுகாப்புப் படையினருக்கு உண்டிகோல்கள் வழங்கப்பட்டுள்ளதோடு, குரங்குகளை விரட்ட 15 அல்ட்ராசோனிக் கருவிகளைப் பொருத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.