"அப்பாவை பத்திரமாகப் பார்த்துக்கோங்க"... மரண ஓலத்திற்கு முன் கடைசியாக வந்த போன்கால் - டெல்லி தீ விபத்தில் பெருஞ்சோகம்!
டெல்லி மாள்வியா நகர் ஹோட்டல் தீ விபத்தில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தந்தையைக் காப்பாற்றத் துணையாக வந்த மகன், பேரக் குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் கொடூரமாகப் பலியான சம்பவம் நாடு முழுவதையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.
டெல்லி மாள்வியா நகரில் உள்ள 'ப்ளரிஷ் ஸ்டே பி அண்டு பி' என்ற 6 மாடி தங்கும் விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தின் போது கட்டடத்திற்குள் இருந்த 79 பேரில் 58 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். உயிரிழந்தவர்களில் 6 பேர் வெளிநாட்டினர், 9 பேர் இந்தியர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 6 பேரின் உடல்கள் தீயில் முற்றிலும் கருகியதால், அவர்களை அடையாளம் காண்பதில் பெரும் சிக்கல் நீடித்து வருகிறது.
இந்த கோர விபத்தில் தான் ஹரியானா மாநிலம் குருகிராமைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் மொத்தமாகப் பலியாகியுள்ளனர். குருகிராமைச் சேர்ந்த விவேக் அகர்வால் என்பவரின் தந்தை ராதே ஷ்யாம் அகர்வால், டெல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடுமையான நோய்க்காகச் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருக்குத் துணையாக இருப்பதற்காக, விவேக் அகர்வால் மற்றும் அவரது தாயார் பிரேமலதா ஆகியோர் மருத்துவமனையின் அருகில் உள்ள இந்த ஹோட்டலில் அறை எடுத்து தங்கி வந்தனர்.
இந்நிலையில், சிகிச்சை பெற்று வரும் ராதே ஷ்யாமை நலம் விசாரிக்கவும், பார்த்துச் செல்லவும் விவேக்கின் மனைவி தர்ஜினி, மகள்கள் ஜிவிஷா, வாரியா மற்றும் உறவினர்கள் 3 பேர் என மொத்தம் 6 பேர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தான் டெல்லிக்கு வந்து இதே ஹோட்டலில் தங்கியுள்ளனர். நேற்று காலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், நச்சுப் புகையிலும் தீயிலும் சிக்கி விவேக், அவரது தாயார், மனைவி, இரண்டு மகள்கள் மற்றும் உறவினர்கள் 3 பேர் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தீ விபத்தில் சிக்கிய தருணத்தில், விவேக் அகர்வால் தனது உறவினரான புனித் குப்தா என்பவருக்கு மொபைல் போன் மூலம் அவசரமாகத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதுவே அவரது கடைசிப் பேச்சாக மாறியுள்ளது. இதைக் கண்ணீருடன் நினைவு கூர்ந்த புனித் குப்தா, "விவேக் போன் செய்து அலறினான். அண்ணே, நாங்கள் அனைவரும் பயங்கரமான தீ விபத்தில் சிக்கிக் கொண்டோம். சுற்றிலும் புகை மூட்டமாக இருக்கிறது, எங்களால் வெளியேற வழியில்லை. நாங்கள் உயிர் பிழைப்பது மிகவும் கடினம் போலத் தெரிகிறது. தயவு செய்து மருத்துவமனையில் இருக்கும் அப்பாவை மட்டும் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்து விட்டான்" என நெஞ்சு உருகக் கூறினார்.
இச்சம்பவம் குறித்து டெல்லி போலீசார் தரப்பில், "முதற்கட்ட விசாரணையின்படி, ஹோட்டல் உணவகத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எனினும், தடயவியல் நிபுணர்களின் முழுமையான அறிக்கை வந்த பிறகே உண்மையான காரணம் தெரியவரும். மேலும், இந்த ஹோட்டல் தீயணைப்புத் துறையிடமிருந்து முறையான தடையில்லா சான்றிதழ் பெறாமலேயே இத்தனை காலம் சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்துள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளது."
மருத்துவமனையில் உயிர் காக்கப் போராடும் தந்தைக்கு உதவ வந்த ஒட்டுமொத்த குடும்பமும் ஒரே அறையில் தீக்கு இரையான சம்பவம், டெல்லி மக்களை நிலைகுலையச் செய்துள்ளது.