டெண்டர் முறைகேடு புகார்: தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

 

தாம்பரம் மாநகராட்சியில் டெண்டர் விதிகளை மீறிப் பணிகளை முன்கூட்டியே முடித்து திறப்பு விழா நடத்தியது தொடர்பான புகாரின் அடிப்படையில், மாநகராட்சி கமிஷனர் எஸ்.பாலச்சந்தரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தாம்பரம் மாநகராட்சியில் டெண்டர் செயல்முறை முடிவதற்கு முன்பே கூட்டுச்சதி செய்து பணிகளை முடித்துத் திறப்பு விழா நடத்தியதாகக் கமிஷனர் எஸ்.பாலச்சந்தர் மற்றும் அதிகாரிகள் மீது அறப்போர் இயக்கம் முதலமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளரிடம் விரிவான புகார் அளித்தது.

பெருங்களத்தூர் பாலம் ரவுண்டானாவில் ரூ.27.30 லட்சத்தில் அசோகத் தூண் அமைத்தல் மற்றும் சிட்லபாக்கம் ரவுண்டானாவில் ரூ.18.60 லட்சத்தில் தண்ணீர் சேமிப்பு விழிப்புணர்வு சிலை அமைத்தல் ஆகிய பணிகள், டெண்டர் திறப்பதற்கு பல நாட்களுக்கு முன்பே முடிக்கப்பட்டுத் திறப்பு விழாவும் நடத்தப்பட்டுள்ளது.

இந்தச் சட்டவிரோதச் செயல்களை மறைத்து ஒப்பந்ததாரருக்குப் பணப்பட்டுவாடா செய்யப் போலி டெண்டர்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த 4 மாதங்களில் தாம்பரம் மாநகராட்சி வெளியிட்ட 565 டெண்டர்களில் பெரும்பாலானவை இறுதி செய்யப்படாமல் முடக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் புகாரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த முறைகேடு புகாரைத் தொடர்ந்து, தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் எஸ்.பாலச்சந்தரை இடமாற்றம் செய்து தமிழக அரசு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியுள்ளது. மேலும், தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் பதவிக்கான கூடுதல் பொறுப்பு ஆவடி மாநகராட்சி கமிஷனர் சரண்யாவிடம் வழங்கப்பட்டுள்ளது.