செம்பாக்கத்தில் பரபரப்பு: வீடு திரும்பிய முதியவரை ஆக்ரோஷமாக முட்டித் தள்ளி மிதித்த மாடுகள்!

 

 

தாம்பரம் அடுத்த செம்பாக்கம் பகுதியில் மருந்தகத்திற்குச் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் சாலையைக் கடந்து வீடு திரும்பிய முதியவர் ஒருவர், சாலையில் சுற்றித் திரிந்த மாடுகளின் தாக்குதலுக்கு உள்ளாகிப் படுகாயமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

வீட்டின் அருகே சாலையில் நின்றிருந்த இரண்டு மாடுகள், இருசக்கர வாகனத்தில் வந்த முதியவரைத் திடீரென ஆக்ரோஷமாக முட்டித் தள்ளியுள்ளன. கீழே விழுந்த முதியவரை அந்த மாடுகள் மிதித்துவிட்டு அங்கிருந்து ஓடிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக விரைந்து சென்று, பலத்த காயமடைந்த முதியவரை மீட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.செம்பாக்கம் பகுதியில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.