“தமிழ் யாருடைய குழந்தையும் அல்ல”  - அமைச்சர் நிர்மல் குமார் பேச்சு!

 

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக்கக் கோரும் தனித்தீர்மானம் சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்டபோது, திமுக மற்றும் ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து மோதல் அவையில் சிறிது நேரம் சலசலப்பை ஏற்படுத்தியது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் சட்டப்பேரவையில் இன்று தனித்தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தார்.

இந்தத் தீர்மானத்தை ஆதரித்து உரையாற்றிய திமுக உறுப்பினர் ரகுபதி, முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல ஆண்டுகளாக இதனை வலியுறுத்தி வந்ததைச் சுட்டிக்காட்டி, "இது எங்களின் குழந்தை, நாங்கள் வளர்ப்பதில் மகிழ்ச்சி" என்று குறிப்பிட்டார்.

இதற்குப் பதிலளித்து பேசிய அமைச்சர் நிர்மல் குமார், "தமிழ் யாருடைய குழந்தையும் அல்ல. இது தமிழ் மக்களின் நீண்ட கால கோரிக்கை. அதனைத் தற்போது முதலமைச்சர் முன்மொழிந்து கொண்டு வந்துள்ளார்" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். அமைச்சர் நிர்மல் குமாரின் இந்தக் கருத்தைத் தொடர்ந்து அவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.