தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை!
தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் பகுதியிலிருந்து தமிழகம் மற்றும் கேரளம் வழியாகத் தெற்கு உள் கர்நாடகா வரை காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுவதால் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அதன்படி திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் தேனி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
நாளை தேனி மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும், பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.