தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு கூடுதலாக 150 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
தமிழகத்தில் மருத்துவப் படிப்பை எதிர்நோக்கியிருக்கும் மாணவர்களுக்குப் பெருமகிழ்ச்சி அளிக்கும் வகையில், அரசு மருத்துவக் கல்லூரிகளுக்குக் கூடுதலாக 150 இளங்கலை மருத்துவ இடங்களை ஒதுக்கீடு செய்து தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேசிய மருத்துவ ஆணையத்தின் மருத்துவ மதிப்பீடு மற்றும் தரவரிசை வாரியம் வெளியிட்டுள்ள புதிய உத்தரவின்படி, தமிழகத்தில் உள்ள மூன்று முக்கிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்குத் தலா 50 கூடுதல் இடங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி, திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆகிய மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் தற்போது தலா 100 ஆக இருக்கும் எம்பிபிஎஸ் இடங்களின் எண்ணிக்கை, இந்த 2026-27 நடப்பு கல்வியாண்டு முதல் தலா 150 இடங்களாக அதிகரிக்கப்படவுள்ளது.
கடந்த ஜூலை 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நாமக்கல் மற்றும் திருப்பூர் கல்லூரிகளுக்கு முதற்கட்டமாக ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 இடங்களை வழங்கி தேசிய மருத்துவ ஆணையம் இறுதி அனுமவழங்கியுள்ளது.
தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரிக்கப்படுவது கடந்த ஐந்து ஆண்டுகளில் இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்னதாக கடந்த 2021-ஆம் ஆண்டில் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டதற்குப் பிறகு, மருத்துவ இடங்களின் எண்ணிக்கையில் எவ்வித மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது. தற்போது கிடைத்துள்ள இந்த கூடுதல் அனுமதியின் மூலம், தமிழகத்தில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரிகளின் மொத்த எம்பிபிஎஸ் இடங்களின் எண்ணிக்கை 5,050-லிருந்து 5,200 ஆக உயர்ந்துள்ளது.
இந்த கூடுதல் எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதன் மூலம், நடப்பு கல்வியாண்டிற்கான மருத்துவச் சேர்க்கைக்கான வாய்ப்புகள் கணிசமாக அதிகரித்துள்ளன. குறிப்பாக, தமிழக அரசின் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவக் கனவோடு காத்திருக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இந்த கூடுதல் இடங்கள் மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும் என்று மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த இடங்கள் அனைத்தும் நீட் தேர்வு மதிப்பெண் தகுதி மற்றும் மாநில இடஒதுக்கீட்டு விதிகளின் அடிப்படையில் அரசுத் தேர்வுக் குழுவின் மூலம் நிரப்பப்படவுள்ளன.