தமிழக பாஜக துணைத்தலைவர் ஏ.ஜி.சம்பத் ராஜினாமா... பாஜகவில் அடுத்தடுத்து விழும் விக்கெட்டுகள்! 

 

தமிழக பாரதிய ஜனதா கட்சியில் கடந்த சில நாட்களாக உட்கட்சிப் பூசல்களும், அதிரடி மாற்றங்களும் அரங்கேறி வரும் சூழலில், தற்பொழுது கட்சியின் முக்கியத் தூணாகக் கருதப்பட்ட மாநிலத் துணைத்தலைவர் ஏ.ஜி.சம்பத் தனது பதவியையும், அடிப்படை கட்சிப் பொறுப்புகளையும் ராஜினாமா செய்துள்ளார்.

தமிழக பாஜகவின் தற்போதைய மாநிலத் தலைவராக இருக்கும் நயினார் நாகேந்திரனுக்கு, ஏ.ஜி.சம்பத் இன்று காலை தனது அதிகாரப்பூர்வ ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் "முழுக்க முழுக்கத் எனது தனிப்பட்ட காரணங்களால், என்னால் இனிவரும் காலங்களில் கட்சிப் பணிகளைத் தொடர்ந்து தொய்வின்றி கவனிக்க இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, மனப்பூர்வமாக எனது மாநிலத் துணைத்தலைவர் பதவி மற்றும் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் உடனடியாக விலகிக் கொள்கிறேன்" என சுருக்கமாகத் தனது விலகல் கடிதத்தை முடித்துள்ளார்.

தமிழக பாஜகவில் சமீபகாலமாக நிலவி வரும் கோஷ்டி பூசல்கள் மற்றும் தலைமைக்கு எதிரான அதிருப்தியே இந்த ராஜினாமாவிற்கு உண்மையான காரணம் என அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

ஏற்கெனவே, கட்சியின் மற்றொரு செல்வாக்குமிக்க மாநிலத் துணைத்தலைவரான கரு. நாகராஜன் பாஜகவிலிருந்து அதிரடியாக விலகி, முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடங்கியுள்ள புதிய இயக்கத்தில் இணைவதாகப் பகிரங்கமாக அறிவித்திருந்தார். அந்தப் பரபரப்பு அடங்குவதற்குள், தற்பொழுது மற்றொரு மாநிலத் துணைத்தலைவரான ஏ.ஜி.சம்பத்தும் கட்சியை விட்டு வெளியேறியிருப்பது தமிழக பாஜக தலைமைக்கு விழுந்த அடுத்தடுத்த பேரிடியாகப் பார்க்கப்படுகிறது.

ஏ.ஜி.சம்பத் தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை என்றாலும், அவரும் கரு. நாகராஜனைப் போல அண்ணாமலையின் இயக்கத்தை நோக்கிச் செல்வாரா அல்லது மாற்றுக் கட்சியில் இணைவாரா என்ற எதிர்பார்ப்பு தற்பொழுது அதிகரித்துள்ளது. தமிழகத்தில் பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வருவது தமிழக அரசியல் களத்தில் பெரும் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.