தமிழக பட்ஜெட் தாக்கல் - தவெக எம்.எல்.ஏ-க்கள் அவசர ஆலோசனை!

 

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் 2026-27-ஆம் நிதியாண்டுக்கான கன்னிப் பட்ஜெட் நாளை (ஆகஸ்ட் 5) சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், தவெக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில், கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் தலைமையில் இக்கூட்டம் நடைபெறுகிறது. தவெக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் இதில் பங்கேற்றுள்ளனர்.

நாளை தொடங்கும் வரவு-செலவுத் திட்டக் கூட்டத்தொடரில் பேரவை நடவடிக்கைகளை எவ்வாறு எதிர்கொள்வது, எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்த தமிழகச் சட்டமன்றக் கூட்டம் நாளை காலை மீண்டும் கூடுகிறது. இதில் தவெக அரசின் முதல் பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் என். மேரி வில்சன் தாக்கல் செய்யவுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 6-ஆம் தேதி வேளாண் துறைக்கான தனி வரவு-செலவுத் திட்டத்தை வேளாண்மைத் துறை அமைச்சர் ஆர். வினோத் தாக்கல் செய்கிறார். தவெக அரசு தாக்கல் செய்யும் முதல் முழுமையான நிதிநிலை அறிக்கை இது என்பதால், மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.