’கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தின் பெயர் மாற்றம் - தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு!

 

தமிழகச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கையில், 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்டத்தின் பெயரிலிருந்து 'கலைஞர்' என்ற சொல் நீக்கப்பட்டு புதிய பெயரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் மரிய வில்சன், இத்திட்டத்தைக் 'மகளிர் உரிமைத் திட்டம்' என்றே சுட்டிக்காட்டினார். இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவதற்காக இந்த பட்ஜெட்டில் ரூ.14,414 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மகளிர் உரிமைத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், தொகையை உயர்த்துவதற்கான புதிய அறிவிப்புகள் எதுவும் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை.

முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களின் பெயர்களும் இந்த பட்ஜெட்டில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள வரிசையில், மகளிர் உரிமைத் திட்டத்தின் பெயரும் மாற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.