மத்திய கிழக்கு போர் பதற்றம் - தமிழர்களுக்காகத் தனி உதவி எண்களை அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்!
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக, அங்கு வசிக்கும் தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தமிழக அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே மூண்டுள்ள மோதலால் வளைகுடா நாடுகள் முழுவதும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. இந்தச் சூழலில், அங்குள்ள லட்சக்கணக்கான தமிழர்களின் பாதுகாப்பு குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளார்.
ஈரானில் உள்ள இந்தியர்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து, இந்தியத் தூதரகம் வழங்கும் வழிகாட்டுதல்களைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் இதற்காகத் தனியாகக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, நிலைமை 24 மணி நேரமும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் அல்லது தமிழகத்தில் உள்ள அவர்களது குடும்பத்தினர் எந்த நேரத்திலும் உதவி கோரி அரசைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளைகுடா நாடுகளில் உள்ள தமிழர்களுக்கு ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால், டெல்லி தமிழ்நாடு இல்லக் கட்டுப்பாட்டு அறை நிலையான தொலைபேசி: 011-24193300, கைபேசி மற்றும் வாட்ஸ்அப்: 92895 16712, அயலகத் தமிழர் நலத்துறை (24/7 சேவை): இந்தியாவிற்குள் (கட்டணமில்லா எண்): 1800 309 3793, வெளிநாட்டிலிருந்து (மிஸ்டு கால்): +91 80 6900 9900, நேரடித் தொடர்பு எண்: +91 80 6900 9901 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
ஈரான் மட்டுமின்றி, அதனைச் சுற்றியுள்ள ஐக்கிய அரபு அமீரகம், குவைத், பஹ்ரைன், ஓமன், சவுதி அரேபியா மற்றும் கத்தார் ஆகிய நாடுகளிலும் தற்போது பதற்றமான சூழல் நிலவுகிறது. குறிப்பாக விமானப் போக்குவரத்து மற்றும் கடல்வழிப் பாதைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளால், அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்த கவலை அதிகரித்துள்ளது.
தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த உதவி எண்களைப் பயன்படுத்தி, பாதிக்கப்பட்டவர்கள் தங்களது இருப்பிடம் மற்றும் தற்போதைய நிலை குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொள்ளலாம்.