மீனவர்களுக்கு முதல்வர் ஸ்டாலினின் 6 'மெகா' அறிவிப்புகள்!
கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 25 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின், மாவட்டத்தின் நீண்டகாலத் தேவைகளை நிறைவேற்றும் விதமாக முதலமைச்சர் முக்கிய திட்டங்களை அறிவித்தார்.
குமரி மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய, பழையாற்றில் இருந்து கூடுதல் குடிநீர் வழங்க ₹28.20 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும். மேலும், தூய்மையைப் பேண ₹25 கோடி செலவில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்படும்.
அதே போன்று குளச்சல் நகராட்சி மற்றும் மண்டைக்காடு பேரூராட்சி பகுதிகளில் ஓடும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஏ.வி.எம் கால்வாய், ₹1.20 கோடி செலவில் தூர்வாரப்பட்டுப் புனரமைக்கப்படும்.
களியக்காவிளை - குமரி சாலையில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, முக்கியப் பகுதிகளில் ₹9 கோடி மதிப்பீட்டில் சாலைகள் அகலப்படுத்தப்படும்.
கல்குளம் வட்டத்தில் அமைந்துள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற தூய மரியா பசிலிக்கா தேவாலயம், அதன் பழமை மாறாமல் இருக்க ₹2 கோடி செலவில் அரசு சார்பில் சீரமைக்கப்படும்.
மீனவர் குடும்பங்களுக்குத் தற்போது வழங்கப்பட்டு வரும் கல்வி மற்றும் திருமண நிதியுதவித் தொகைகள் அனைத்தும் உயர்த்தி வழங்கப்படும். இதற்கான அரசாணை மிக விரைவில் வெளியிடப்படும். ஆழ்கடலில் மீன் பிடிக்கச் செல்லும்போது மீனவர்கள் காணாமல் போனால், அவர்களுக்கான காப்பீடு மற்றும் அரசு நிவாரணத் தொகைகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். அந்த இடைப்பட்ட காலத்தில், பாதிக்கப்பட்ட மீனவரின் குடும்பம் வாழ்வாதாரத்திற்காகத் தவிக்கக் கூடாது என்பதால், வாரிசுதாரர்களுக்கு மாதம் ₹2,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார்.