தென்காசி இராமநதி, கடனா நதி அணைகளில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறப்பு - முதல்வர் உத்தரவு!

 

தென்காசி மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று, கார் பருவ சாகுபடிக்காக இராமநதி மற்றும் கடனா நதி ஆகிய நீர்த்தேக்கங்களில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இது குறித்துத் தமிழக அரசின் நீர்வளத்துறை முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், தென்காசி மாவட்டம் இராமநதி நீர்த்தேக்கத்தின் கீழ் உள்ள பாசன நிலங்களின் கார் பருவ சாகுபடிக்காக இன்று முதல் தண்ணீர் திறக்க ஆணையிடப்பட்டுள்ளது.

இன்று ஜூன் 25 முதல் வரும் அக்டோபர் 31-ஆம் தேதி வரை மொத்தம் 129 நாட்களுக்குத் தண்ணீர் திறந்து விடப்படும். நீர் இருப்பைப் பொறுத்து, வினாடிக்கு 60 கன அடிக்கு மிகாமலும், மொத்தத் தேவையாக 168.03 மில்லியன் கன அடிக்கு மிகாமலும் தண்ணீர் திறக்கப்படும்.

இதன் மூலம் இராமநதி நீர்த்தேக்கத்தின் கீழ் பாசனம் பெறும் வடகால், தென்கால் மற்றும் பாப்பான்கால் ஆகியவற்றின் வழியே மொத்தம் 1,008.19 ஏக்கர் நேரடிப் பாசன நிலங்கள் பாசன வசதி பெறும்.

இதே போல், தென்காசி மாவட்டத்தின் மற்றொரு முக்கிய நீர் ஆதாரமான கடனா நீர்த்தேக்கத்தில் இருந்தும் இன்று முதல் தண்ணீர் திறக்கப்படுகிறது. இராமநதி அணையைப் போலவே கடனா நதி அணையிலும் இன்று முதல் அக்டோபர் 31-ஆம் தேதி வரை 129 நாட்களுக்குப் பாசன நீர் விநியோகம் இருக்கும்.

வினாடிக்கு 125 கன அடிக்கு மிகாமலும், பாசனப் பருவ காலத்தின் மொத்தத் தேவையான 664.60 மில்லியன் கன அடிக்கு மிகாமலும் நீர் இருப்புக்கு ஏற்பத் தண்ணீர் திறந்து விடப்படும். இதன் மூலம் இந்த நீர்த்தேக்கத்தின் கீழ் உள்ள அரசபத்து, வடகுருவபத்துகால், ஆழ்வார்குறிச்சி தென்கால், ஆம்பூர் பெருங்கால், மஞ்சம்புளிகால், காக்கநல்லூர்கால் மற்றும் காங்கேயன்கால் ஆகிய வாய்க்கால்களின் வழியே மொத்தம் 3,987.57 ஏக்கர் பாசனப் பரப்புகள் பெரும் பயன் பெறும்.

தென்காசி மாவட்டத்தின் இரு முக்கிய அணைகளில் இருந்தும் ஒரே நேரத்தில் கார் பருவ சாகுபடிக்குத் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், அப்பகுதி விவசாயப் பெருமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.