வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைக்கு தலா ரூ.50 லட்சம் ஊக்கத்தொகை - முதல்வர் விஜய் அறிவிப்பு!

 

ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், தடகளம் 4x400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள தமிழகத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் மற்றும் வீரர் விஷால் ஆகியோருக்கு தலா ரூ.50 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் எனத் தமிழக முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

ஜப்பானில் கோலாகலமாக நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைசிறந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்று வருகின்றனர். இதில் தடகளம் 4x400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டப் பிரிவில் கலந்துகொண்ட தமிழகத்தைச் சேர்ந்த வித்யா ராம்ராஜ் மற்றும் விஷால் ஆகியோர் சிறப்பாகச் செயல்பட்டு வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

இந்தச் சாதனையைப் படைத்த வித்யா ராம்ராஜ் மற்றும் விஷால் ஆகியோருக்குத் தனது சமூக வலைத்தளப் பதிவு மூலமாக முதலமைச்சர் விஜய் வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும், தமிழக அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் முறையான நிதியுதவி மற்றும் பயிற்சிகளைப் பெற்றுவரும் இருவரும், தமது கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால் மட்டுமே இமாலயச் சாதனையைப் படைத்துள்ளதாக அவர் பாராட்டியுள்ளார்.

தமிழகத்தின் பெருமையை உலக அரங்கில் உயர்த்திய இந்த இரு திறமையான தடகள வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் தலா ரூ.50 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அரசின் இந்த ஊக்கத்தொகை அறிவிப்பு விளையாட்டுத் துறையினர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.