இன்று முதல்வர் விஜய் தனித்தீர்மானம் தாக்கல் - உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக அங்கீகரிக்க வேண்டும்!

 

தமிழகச் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மற்றும் முதன்மை மொழியாக அங்கீகரிக்க வலியுறுத்தி முதலமைச்சர் விஜய் இன்று தனித் தீர்மானம் கொண்டு வருகிறார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை முதன்மை நீதிமன்ற மொழியாக அங்கீகரிக்க வேண்டும், தமிழில் தாக்கல் செய்யப்படும் மனுக்கள் மற்றும் வாதங்களுக்கு உரிய நடைமுறைகளை உருவாக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

நீதிமன்ற உத்தரவுகள், தீர்ப்புரைகள் மற்றும் தீர்ப்பாணைகள் அனைத்தையும் தமிழில் வழங்கும் முறையை உருவாக்கத் தேவையான அனைத்துச் சட்ட நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி இந்தத் தீர்மானம் முன்மொழியப்படுகிறது.

வினாக்கள் மற்றும் விடைகள் நேரம் நிறைவடைந்தவுடன் முதலமைச்சர் இந்தத் தீர்மானத்தைக் கொண்டுவருகிறார். உறுப்பினர்களின் விவாதத்திற்குப் பிறகு, குரல் வாக்கெடுப்பு மூலம் இது நிறைவேற்றப்படவுள்ளது. ஏற்கனவே கடந்த 2006-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதியன்று இதே கோரிக்கையை வலியுறுத்திச் சட்டமன்றத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தீர்மானத்தைத் தொடர்ந்து, முதலமைச்சர் தன் வசம் வைத்துள்ள காவல், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மற்றும் தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் இன்று நடைபெறுகிறது. துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை வெளியிடும் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு வரும் 7-ஆம் தேதி தனது பதிலுரையை வழங்குகிறார்.