தமிழகம் முழுவதும் 480 டாஸ்மாக் கடைகள் மூடல் - முதலமைச்சர் விஜய் உத்தரவு!
தமிழகத்தில் நிலவி வரும் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு விவாதங்களை முன்வைத்து வரும் வேளையில், அதற்குச் செயல்வடிவில் அதிரடியான பதிலடி கொடுக்கும் வகையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு மிக முக்கியமான மக்கள் நல உத்தரவு ஒன்றை அமல்படுத்தியுள்ளது.
பொதுமக்கள், பெண்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் நீண்ட கால கோரிக்கையினை ஏற்று, தமிழகம் முழுவதும் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அருகில் விதிமுறைகளை மீறிச் செயல்பட்டு வந்த 480 டாஸ்மாக் மதுபானக் கடைகள் முழுமையாக மூடப்பட்டுள்ளன.
கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற தவெக-வின் உயர்மட்டக் கொள்கை விளக்கக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டபடி, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளிலும், மாணவர்களின் ஒழுக்கத்தைக் கெடுக்கும் வகையிலும் அமைந்துள்ள மதுபானக் கடைகளைக் கணக்கெடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் (சுமார் 500 மீட்டர் சுற்றளவிற்குள்) விதிகளுக்குப் புறம்பாகச் செயல்பட்டு வரும் மொத்தம் 717 டாஸ்மாக் கடைகள் முதற்கட்டமாக அடையளம் காணப்பட்டன.
முதலமைச்சரின் நேரடி உத்தரவின் பேரில், டாஸ்மாக் மாவட்ட மேலாளர்கள் மற்றும் வருவாய்த்துறையினர் கடந்த சில நாட்களாக நடத்திய அதிரடி ஆய்வுகளின் பயனாக, அடையாளம் காணப்பட்ட 717 கடைகளில், தற்போதைய நிலவரப்படி 480 கடைகள் முற்றிலும் பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன.
"முதலமைச்சரின் உத்தரவு மிகத் தெளிவாக உள்ளது. தற்பொழுது வரை 480 கடைகள் மூடப்பட்டு, அங்குள்ள மதுப் பாட்டில்கள் அனைத்தும் மாவட்டக் கிடங்குகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. பட்டியலில் உள்ள மீதமுள்ள கடைகள் குறித்தும், அவற்றின் இருப்பிடம் குறித்தும் அதிகாரிகள் தற்பொழுது தீவிரமாக மறுஆய்வு செய்து வருகின்றனர். நீதிமன்ற வழக்குகள் அல்லது இடமாற்றச் சிக்கல்கள் இல்லாத பட்சத்தில், எஞ்சிய கடைகளும் அடுத்த சில நாட்களுக்குள் படிப்படியாக முழுமையாக மூடப்படும்."
அண்மையில் மதுரை திருப்பரங்குன்றத்தில் பள்ளி அருகே தவெக பிரமுகர் ஒருவரால் மூடப்பட்ட டாஸ்மாக் கடை மீண்டும் திறக்கப்பட்டதாக எழுந்த புகாரால் அரசுக்குச் சற்றே தொய்வு ஏற்பட்டிருந்த நிலையில், தற்பொழுது முதலமைச்சர் விஜய் தனது நேரடிப் பார்வையில் இந்த 480 கடைகளை அதிரடியாக மூடச் செய்திருப்பது, தவெக அரசின் மீதான நம்பகத்தன்மையை மக்கள் மத்தியில் மேலும் அதிகரித்துள்ளது.