நடத்துனரிடம் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய முதலமைச்சர் விஜய் - 300 புதிய பேருந்துகள் சேவை தொடக்கம்!
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் அதிநவீன வசதிகளுடன் கூடிய 300 புதிய பேருந்துகளின் சேவையைத் தமிழக முதலமைச்சர் விஜய் இன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்குச் சொந்தமான 13 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை நடத்தி வரும் பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியிலும், முதலமைச்சர் விஜய் அரசு நிர்வாகப் பணிகளில் தீவிரக் கவனம் செலுத்தி வருகிறார்.
சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கும் வகையிலும், பொதுமக்களின் பயண வசதியை மேம்படுத்தும் வகையிலும் பல்வேறு மாடல்களில் இந்தப் புதிய பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. சிஎன்ஜி , டீசல் மற்றும் அதிநவீன மின்சாரப் பேருந்துகள் என மொத்தம் 300 புதிய பேருந்துகள் இன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.
தொடக்க விழா முடிந்ததும், முதலமைச்சர் விஜய் அங்கிருந்த ஒரு புதிய பேருந்தில் ஏறி, தலைமைச் செயலகத்தில் இருந்து கலங்கரை விளக்கம் வரை நேரடியாகப் பயணித்து அதன் தரம் மற்றும் வசதிகள் குறித்து நேரில் ஆய்வு செய்தார். அவருடன் அரசு உயர் அதிகாரிகளும் அந்தப் பேருந்தில் பயணித்தனர்.
பொதுவாக விஐபிக்கள் அல்லது முதலமைச்சர்கள் அரசுப் பேருந்துகளில் ஆய்வு செய்யும் போது டிக்கெட் எடுக்க மாட்டார்கள். ஆனால், இந்த ஆய்வின் போது முதலமைச்சர் விஜய் முற்றிலும் மாறுபட்ட ஒரு பொதுமக்களுக்கான அணுகுமுறையைக் கையாண்டார்.
பேருந்து நகரத் தொடங்கியதும், அங்கிருந்த நடத்துனரை அருகில் அழைத்த முதலமைச்சர் விஜய், அவரிடம் தமக்கான பயணக் கட்டணப் பணத்தைக் கொடுத்து முறைப்படி டிக்கெட் வாங்கிப் பயணித்தார்.
முதலமைச்சரே தன்னிடம் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கியதால் அந்த நடத்துனர் நெகிழ்ச்சி அடைந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி, பொதுமக்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகிப் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.