தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தை தொகுதி மறுவரையறை பாதிக்கும் - முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை!

 

மத்திய அரசு உத்தேசித்துள்ள தொகுதி மறுவரையறை நடவடிக்கையால் தமிழ்நாட்டின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவமும் மாநில உரிமைகளும் கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும், இதனைக் காக்க அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற இக்கலந்தாய்வுக் கூட்டத்தில் காங்கிரஸ் (11), விசிக (2), இந்திய கம்யூனிஸ்ட் (2), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (2), ஐயுஎம்எல் (1) மற்றும் மதிமுக (1) ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 19 மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

மக்கள்தொகை கட்டுப்பாட்டுத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்திய தமிழ்நாடு மற்றும் இதர தென் மாநிலங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் குறையாமல் தடுப்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மக்களவையின் தற்போதைய உறுப்பினர் எண்ணிக்கையான 543 என்பதியை மாற்றாமல் நிரந்தரமாக நிலைநிறுத்த வேண்டும் என்றும், மாநிலங்களுக்கு இடையேயான தொகுதிப் பகிர்வு விகிதம் மாறாமல் இருக்கத் தேவையான சட்டத் திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 50% வரை உயர்த்தலாம் என்ற கருத்து மக்களைத் திசைதிருப்புவதற்காகக் கூறப்படும் ஒரு மாயை என உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். சர்வ வல்லமை பெற்றதாக இருக்கும் தொகுதி மறுவரையறை ஆணையத்தின் அதிகாரத்தை வரையறுத்து, இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது.

தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அரசினர் தனித் தீர்மானம் நிறைவேற்ற இக்கூட்டத்தில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது. தொகுதி மறுவரையறை தொடர்பான புதிய மசோதாவையும் அரசமைப்பு சட்டத் திருத்தத்தையும் எதிர்த்து நாடாளுமன்றத்தில் வாக்களிக்குமாறு அனைத்துக் கட்சி எம்.பி.க்களுக்கும் முதலமைச்சர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார்.