நவம்பர் 13-ல் பள்ளிகளில் குழந்தைகள் தினக் கொண்டாட்டம்! மாணவர்களுக்கு கேக் வழங்க தமிழக அரசு உத்தரவு
முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் பிறந்தநாளான நவம்பர் 14-ம் தேதி ஆண்டுதோறும் தேசிய குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நவம்பர் 13-ம் தேதி குழந்தைகள் தினக் கொண்டாட்டங்களை நடத்த பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக, பள்ளி மாணவர்களுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகள் வழங்கப்பட உள்ளன. இதற்காக சுமார் ரூ.9.27 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மொத்தம் 61 லட்சத்து 84 ஆயிரத்து 566 கேக் துண்டுகள் கொள்முதல் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு கேக் துண்டும் 45 கிராம் எடை கொண்டதாக இருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
கேக் விநியோகத்தின்போது மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தைக் கவனிக்கவும் பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. உணவு ஒவ்வாமை உள்ள மாணவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யவும், கேக் வழங்கும் நிகழ்வை முறையாகப் பதிவு செய்யவும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளனநவம்பர் 14-ம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவதற்கு முந்தைய நாளான நவம்பர் 13-ம் தேதியே பள்ளிகளில் இந்த சிறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.