“தமிழ்நாட்டில் ஒரே நாளில் 228 பேருக்கு டெங்கு! சென்னையில் மட்டும் 79 பேர் பாதிப்பு

 

 

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நடப்பாண்டில் இதுவரை 17,277 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் மாநிலம் முழுவதும் 228 பேருக்கு புதிதாக டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.இதில் சென்னையில் மட்டும் ஒரே நாளில் 79 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் டெங்கு பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சென்னையிலும் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக டெங்குவை பரப்பும் கொசுக்களின் பெருக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொசு ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கொசு ஒழிப்பு பணியாளர்கள் மூலம் வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் ஆய்வு நடத்தப்பட்டு, கொசுப்புழு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அழிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்களும் தங்கள் வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, ‘ஸ்கரப் டைபஸ்’ எனப்படும் உண்ணிக் காய்ச்சல் பாதிப்பும் தமிழகத்தில் பதிவாகி வருகிறது. மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ள தகவலின்படி, நடப்பாண்டில் இதுவரை 4,648 பேர் உண்ணிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.டெங்கு மற்றும் உண்ணிக் காய்ச்சல் இரண்டுமே காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடியவை என்பதால், தொடர்ந்து காய்ச்சல், உடல்வலி, சோர்வு உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் பொதுமக்கள் தாமாகவே மருந்துகளை எடுத்துக்கொள்ளாமல் மருத்துவரை அணுகுவது அவசியம்.

குறிப்பாக மழைக்காலத்தில் வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வது, கொசு கடிப்பதைத் தவிர்ப்பது மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளாமல், காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உரிய மருத்துவ ஆலோசனையைப் பெறுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.