இன்று தமிழகம் முழுவதும் மின்வாரிய ஆன்லைன் சேவைகள் முடக்கம் - அதிகாரிகள் அவசர அறிவிப்பு!

 

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் கணினி தரவு சர்வர் மேம்பாட்டுப் பணிகள் இன்று நடைபெறுவதால், தமிழகம் முழுவதும் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி வரை ஆன்லைன் மூலமாக மின் கட்டணம் செலுத்தும் வசதி உள்ளிட்ட அனைத்து இணையதள சேவைகளும் தற்காலிகமாக இயங்காது என்று மின்வாரிய அதிகாரிகள் அவசரமாகத் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம், பொதுமக்களுக்கும் மின்சார நுகர்வோர்களுக்கும் இன்னும் கூடுதலான வேகத்தில் தரமான ஆன்லைன் சேவைகளை வழங்குவதற்காகத் தனது கணினி தரவு சர்வர்களை படிப்படியாக நவீனமயமாக்கும் மற்றும் மேம்படுத்தும் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக அவ்வப்போது சர்வர் பராமரிப்புப் பணிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, இன்று ஜூன் 7ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை முதல் சர்வர் மேம்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனால் வீடுகள் மற்றும் கடைகளுக்கான தாழ்வழுத்த மின் நுகர்வோர்களுக்கான இணையதள மின்சார கட்டணச் சேவைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிற ஆன்லைன் சேவைகள் அனைத்தும் இன்று மாலை 6 மணி வரை தற்காலிகமாகத் தமிழ்நாடு முழுவதும் முழுமையாக இயங்காது.

இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "மின் நுகர்வோர்கள் தங்களது இணையதள கட்டணப் பரிவர்த்தனைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய இதர ஆன்லைன் சேவைகளை இன்று மாலை 6 மணிக்கு முன்பாகவோ அல்லது அதற்குப் பின்னரோ தங்களது நேரத்தைத் திட்டமிட்டுப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த தற்காலிகத் தொழில்நுட்ப இடையூறால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்குத் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் தனது ஆழந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறது" என தெரிவித்துள்ளனர்.

எனவே, இன்று மின் கட்டணம் செலுத்தத் திட்டமிட்டிருந்த பொதுமக்கள், மாலை 6 மணிக்கு மேல் மின்வாரிய இணையதளம் மற்றும் செயலிகளைப் பயன்படுத்தி தங்களது கட்டணங்களை எவ்விதத் தடையுமின்றிச் செலுத்திக் கொள்ளலாம்.