தமிழகத்தில் 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் - புதிய டெண்டர் பணிகளைத் தொடங்க மின்சார வாரியம் உத்தரவு!

 

தமிழகத்தில் உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மின் பயன்பாட்டைக் துல்லியமாகக் கணக்கிடுவதற்காக 3 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்கள்' நிறுவும் திட்டத்திற்குத் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் மீண்டும் ஒப்புதல் அளித்துள்ளது. மின்சார வாரியத்தின் செயல்பாட்டுச் செலவுகளைக் குறைக்கவும், மின் விநியோகத்தை நவீனப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் புதுப்பிக்கப்பட்ட மின் விநியோகத் துறைத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் ஸ்மார்ட் மீட்டர்களைப் பொருத்துவதற்கு ஏற்கனவே கோரப்பட்டிருந்த டெண்டர்கள் பல்வேறு காரணங்களால் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், மின்சார வாரியத்தின் 128-வது வாரியக் கூட்டத்தில் இத்திட்டத்தை மீண்டும் முன்னெடுத்துச் செல்வதற்கான அதிகாரப்பூர்வ ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

திட்டத்தை விரைவாகச் செயல்படுத்தும் நோக்கில், இதற்கான புதிய டெண்டர் கோரும் நடைமுறைகள் மற்றும் பணிகள் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கப்பட உள்ளன. இந்தச் சிறப்பு மீட்டர்கள் பொருத்துப்படுவதன் மூலம் மின் நுகர்வோரின் பயன்பாடு துல்லியமாக டிஜிட்டல் முறையில் பதிவாகும்.

மேலும், மின் ஊழியர்கள் நேரில் சென்று கணக்கெடுக்க வேண்டிய அவசியமின்றி, தானியங்கி முறையில் கணக்கீடு செய்யப்படும் என்பதால் மின்சார வாரியத்தின் நிர்வாகச் செலவினங்கள் கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.