தமிழகத்தில் 12,334 பேருந்துகளில் பெண்களுக்கான கட்டணமில்லா பயணம் விரிவாக்கம்!

 

தமிழக அரசு பெண்களுக்காகச் செயல்படுத்தி வரும் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டு, காந்தி பிறந்தநாளான வரும் அக்டோபர் 2-ஆம் தேதி முதல் புதிய 'வெற்றி பயணம்' திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இது நாள் வரை தமிழகம் முழுவதும் உள்ள 7,710 சாதாரண மாநகர பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்து வந்தனர். இதன் மூலம் தினமும் 72 லட்சம் பெண்கள் பயனடைந்து வந்தனர்.

விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள 'வெற்றி பயணம்' திட்டத்தின் கீழ், மாநகர மற்றும் நகர்ப்பகுதிகளில் இயங்கும் எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் (Deluxe) அரசு பேருந்துகள் என கூடுதலாக 2,302 பேருந்துகள் இணைக்கப்பட்டுள்ளன.

மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்ய ஏதுவாக 2,047 சாதாரண கட்டண புறநகர் பேருந்துகளிலும், 275 சாதாரண கட்டண மலைப்பகுதி பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமின்றிப் பயணிக்கலாம்.

இதன் மூலம் தமிழகம் முழுவதும் மொத்தம் 12,334 பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லாமல் பயணிக்க முடியும். ஏற்கனவே இயங்கிய பஸ்களைக் காட்டிலும் கூடுதலாக 4,624 பேருந்துகள் இத்திட்டத்தின் கீழ் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின் மூலமாகத் தினசரி பயனடையும் பெண்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 15 லட்சத்தைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.