undefined

"தமிழ்நாடு போராடும் - தமிழ்நாடு வெல்லும்" - பிறந்தநாளில் முதல்வர் ஸ்டாலின் போட்ட ட்வீட்!

 

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தனது 73-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். தனது பிறந்தநாள் காலைப் பொழுதைச் சமூக நீதிக் கொள்கைகளுக்கு மரியாதை செலுத்துவதன் மூலம் தொடங்கிய அவர், தொண்டர்களுக்கும் மக்களுக்கும் உணர்ச்சிகரமான ஒரு செய்தியைத் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். 

இன்று காலை சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்திற்குச் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், அங்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களிலும் அவர் மரியாதை செலுத்தினார். இந்நிலையில் முதல்வர் வெளியிட்ட பதிவில், தனது வாழ்நாள் கடமை குறித்தும் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் குறித்தும் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார். 

"இளமை முதல் 73ம் வயது வரை நாட்டு மக்களுக்காகப் பணியாற்றுவதே என் வாழ்நாள் கடமை எனச் செயலாற்றி வருகிறேன். உழைப்பைத் தவிர வேறொன்று அறியேன். திராவிட மாடல் ஆட்சி மூலம் தமிழகத்தை இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக உயர்த்தியுள்ளதாகவும், அரசின் திட்டங்கள் ஒவ்வொரு இல்லத்திலும் சென்றடைந்துள்ளது.

"சூழும் சூழ்ச்சிகளை அறிவுத்திறத்தால் அனைவரும் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும். இதற்காக என்னை இன்னும் முழுமையாக ஒப்படைத்துக் கொள்வேன்" என்பதே எனது பிறந்தநாள் உறுதிமொழி என முதல்வர் தெரிவித்துள்ளார்.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் காட்டிய பாதையில் #தமிழ்நாடு_போராடும் #தமிழ்நாடு_வெல்லும் என்ற வாசகங்களுடன் தனது பதிவை அவர் நிறைவு செய்துள்ளார். முதலமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டுப் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு மாநில முதலமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், மரக்கன்றுகள் நட்டும் முதல்வரின் பிறந்தநாளைக் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர். வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, முதல்வரின் இந்தப் பிறந்தநாள் செய்தி தொண்டர்களிடையே பெரும் உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.