தமிழ்நாடு தீயணைப்புத் துறை ஆணையத் தலைவர் சங்கர் ஜிவால் திடீர் ராஜினாமா!

 

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையை நவீனப்படுத்துவதற்காகக் கடந்த ஆண்டு அமைக்கப்பட்ட மாநிலத்தின் முதலாவது 'தீயணைப்புத் துறை ஆணையத்தின்' தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

ஆணையத்தின் தலைவரான ஓய்வுபெற்ற தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் ஐபிஎஸ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் ஒரே நேரத்தில் பதவி விலகியிருப்பது அரசு மற்றும் காவல்துறை வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தீயணைப்புத் துறை ஆணையத்தின் முதல் தலைவராக ஓய்வுபெற்ற டிஜிபி சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டார். செப்டம்பர் 1 முதல் இந்த ஆணையம் முறைப்படி செயல்படத் தொடங்கியது. சங்கர் ஜிவாலுடன் சேர்ந்து ஆணையத்தின் முழுநேர மற்றும் பகுதிநேர உறுப்பினர்களாகப் பணியாற்றி வந்த சத்தியமூர்த்தி (பொதுப்பணித்துறையின் முன்னாள் தலைமைப் பொறியாளர்), நமச்சிவாயம் (தீயணைப்புத்துறையின் ஓய்வுபெற்ற மாவட்ட அதிகாரி), டாக்டர் ஏ.எம். இக்ராம் (விக்ரம்) (பகுதிநேர உறுப்பினர் - வேலூர் சிஎம்சி மருத்துவமனையின் பயர் மார்ஷல் செயலாளர்) மூத்த அதிகாரிகளும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

தீயணைப்பு நிலையங்களின் தரத்தை உயர்த்துதல், புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்துதல் மற்றும் கட்டிடங்களுக்கான தீயணைப்பு உரிமம் வழங்குவதை முறைப்படுத்துதல் போன்ற முக்கிய நோக்கங்களுக்காக இந்த 6 பேர் கொண்ட உயர்மட்ட ஆணையம் உருவாக்கப்பட்டது.

திடீரென தலைவர் மற்றும் மூன்று உறுப்பினர்கள் என முக்கியப் பொறுப்புகளில் இருந்த 4 பேர் ஒரே நேரத்தில் தங்களது பதவி விலகல் கடிதத்தை அரசுக்கு அனுப்பியுள்ளனர். நிர்வாகக் காரணங்களா அல்லது தவெக அரசின் புதிய கொள்கை முடிவுகள் சார்ந்த மாறுபாடுகளா என இந்தத் தொடர் ராஜினாமாக்களுக்கான அதிகாரப்பூர்வக் காரணங்கள் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், இது அரசு நிர்வாகப் பிரிவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.