தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் - தரவரிசைப் பட்டியல் வெளியானது!
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் 2026-27-ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை மீன்வளப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைத் தரவரிசைப் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
நாகப்பட்டினத்தில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில், துணைவேந்தர் டாக்டர் பெலிக்ஸ் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார். நடப்பு கல்வியாண்டில் பல்வேறு இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கு மொத்தம் 15,585 மாணவர்கள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்திருந்தனர்.
விண்ணப்பித்தவர்களில் 9,265 மாணவிகளும், 6,320 மாணவர்களும் அடங்குவர். மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் மீன்வளப் படிப்புகளில் சேர ஆர்வம் காட்டியுள்ளனர். தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதிகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.
பி.எஃப்.எஸ்சி (B.F.Sc - மீன்வள அறிவியல்), பி.டெக் (B.Tech - மீன்வளப் பொறியியல்), பி.டெக் பயோடெக்னாலஜி, மற்றும் மீன்வள ஊட்டச்சத்து துறை சார்ந்த பட்டப்படிப்புகளுக்கு இத்தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் சேர்க்கை நடைபெறவுள்ளது. விண்ணப்பித்த மாணவர்கள் தங்களது தரவரிசை மற்றும் கட்-ஆஃப் விவரங்களைப் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான tnjfu.ac.in மூலம் தெரிந்து கொள்ளலாம்.