வீட்டுவசதி வாரியக் குடியிருப்புகளுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு - தமிழக அரசு அறிவிப்பு!

 

​​​​பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்புகளுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கும் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் மேம்படுத்தப்பட்ட பல்வேறு குடியிருப்புத் திட்டங்களில் விற்பனைக்குரிய அலகுகளைப் பொதுமக்களுக்கு இணையவழி குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்ய முன்னணி நாளிதழ்களில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டிருந்தன.

இத்திட்டங்களுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு கடந்த ஆகஸ்ட் 21 முதல் தொடங்கி செப்டம்பர் 26 வரை தனித்தனியாகக் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு நடைமுறையில் இருந்தது. இதற்குப் பொதுமக்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, அதிகளவிலான மக்கள் பயன்பெறும் வகையிலும், விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கத்துடனும் ஒவ்வொரு திட்டத்திற்கும் நிர்ணயிக்கப்பட்ட இறுதி நாளிலிருந்து மேலும் 15 நாள்கள் கால நீட்டிப்பு வழங்கித் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் தீர்மானித்துள்ளது.

இந்தச் சலுகையைப் பயன்படுத்தித் தகுதியுள்ள பொதுமக்கள் https://tnhb.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் தங்களது விண்ணப்பங்களை எளிமையாகப் பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.