தமிழக அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம்... அதிகாரிகள் சம்பளத்திலிருந்து வசூலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

 

809 நாட்கள் காலதாமதமாக மேல்முறையீடு தாக்கல் செய்த விவகாரத்தில், பள்ளிக் கல்வித் துறை முன்வைத்த காரணங்கள் நீதித்துறையைக் கேலி செய்வது போல் உள்ளதாகக் குறிப்பிட்ட சென்னை உயர் நீதிமன்றம், மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்ததுடன் தமிழக அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்தது. இந்தத் தொகையைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் சம்பளத்திலிருந்து வசூலிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த ஆர். புவனேஸ்வரி என்பவர் கடந்த 2023-ஆம் ஆண்டு தாக்கல் செய்த மனுவில், ஓய்வூதியப் பலன்களுக்காக தமது ஆரம்ப நியமனம் முதல் பணி நிரந்தரம் செய்யப்பட்ட காலம் வரையிலான (ஆகஸ்ட் 8, 1985 முதல் அக்டோபர் 15, 1992 வரை) பணிக்காலத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ள அரசுக்கு உத்தரவிடக் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, புவனேஸ்வரியின் கோரிக்கையை ஏற்று நவம்பர் 29, 2023-இல் உத்தரவு பிறப்பித்தார். இதனை எதிர்த்துப் பள்ளிக் கல்வித் துறைச் செயலர் தரப்பில் 809 நாட்கள் தாமதமாக மேல்முறையீடு செய்யப்பட்டது.

மேல்முறையீட்டு மனுவில் 809 நாட்கள் தாமதமானதற்கான காரணங்களைக் கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விரிவாக குறிப்பிட்டிருந்தார். அதில், 2023 நவம்பரில் அரையாண்டுத் தேர்வு, 2024 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளில் புத்தாண்டு, பொங்கல் விடுமுறை, 10 மற்றும் பிளஸ் 2 செய்முறைத் தேர்வுகள், விடைத்தாள் திருத்தம், 2024 மார்ச் மாதத்தில் மக்களவைத் தேர்தல், ஜூன் -ஜூலையில் கணக்குத் தணிக்கை, ஆகஸ்ட் மாதத்தில் ஆசிரியர் விருது தேர்வு, 2025 அக்டோபரில் கலைத் திருவிழா மற்றும் 2026 தொடக்கத்தில் விடுமுறைகள், தேர்வுப் பணிகள் எனப் பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன் மற்றும் இ. மனோகரன் அடங்கிய அமர்வு, காலதாமதத்திற்குக் கல்வித் துறை கூறியுள்ள காரணங்கள் நீதித்துறையைக் கேலி செய்வது போல் உள்ளதாக கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து, மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தது.

தமிழக அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்த நீதிபதிகள், இந்த தொகையை நான்கு வாரங்களுக்குள் தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக் குழுவிடம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், இந்த அபராதத் தொகையைச் சம்பந்தப்பட்ட பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளின் சம்பளத்திலிருந்து வசூலிக்க வேண்டும் என்றும், மனுக்களை முறையாக எதிர்த்து வாதிடத் தவறிய அதிகாரிகள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.