தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி திடீர் மாற்றம் - புதிய ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் நியமனம்!
தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு முக்கிய மாற்றமாக, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இடமாற்றம் செய்யப்பட்டு, அவருக்குப் பதிலாக புதிய ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ளார். குடியரசுத் தலைவர் மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகத் தமிழக அரசுடன் பல்வேறு விவகாரங்களில் முரண்பட்டு வந்த ஆளுநர் ஆர்.என். ரவி, தற்போது மேற்கு வங்க மாநில ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களின் ஆளுநர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
தற்போது கேரள ஆளுநராகப் பணியாற்றி வரும் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர், தமிழக ஆளுநராகக் கூடுதல் பொறுப்பு வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக ஆளுநராக இருந்த ஆர்.என். ரவி , மேற்கு வங்க மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அங்கு ஆளுநராக இருந்த சி.வி. அனந்த போஸ் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. தமிழகம் தவிரப் பிற மாநிலங்களிலும் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன:
தெலங்கானா ஆளுநராக இருந்த ஜிஷ்ணு தேவ் வர்மா, மகாராஷ்டிரா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இமாச்சலப் பிரதேச ஆளுநராக இருந்த ஷிவ் பிரதாப் சுக்லா, தெலங்கானா ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார். பீகார் முன்னாள் சபாநாயகர் நந்த் கிஷோர் யாதவ், நாகலாந்து ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் சையத் அதா ஹஸ்னைன், பீகார் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் தூதர் தரஞ்சித் சிங் சாந்து, டெல்லியின் புதிய துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் திமுக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் இடையே நீட் விலக்கு மசோதா, நிலுவையில் உள்ள கோப்புகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் நீண்டகாலமாகப் போர் நிலவி வந்தது. 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், இந்த அதிரடி மாற்றம் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மேற்கு வங்கத்திலும் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என். ரவியின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது குறித்த விவாதங்கள் இப்போதே தொடங்கிவிட்டன.