கிறித்துவர்களுக்கு தமிழக அரசின் ஜெருசலேம் புனித பயணம் செல்ல மானியம் - விண்ணப்பிக்கும் முறை!

 

ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொண்டு திரும்பும் கிறித்துவ மக்களுக்கான மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் தகுதியான நபர்களுக்கு நேரடி மானியம் வழங்கப்பட உள்ளது.

ஜெருசலேம் புனிதப் பயணம் சென்று திரும்பும் கிறித்துவப் பயணிகளில் 550 பேருக்கு நபர் ஒருவருக்குத் தலா ரூ.37,000 வீதமும், ஆன்மீகப் பயணம் மேற்கொள்ளும் 50 கன்னியாஸ்திரிகளுக்கு நபர் ஒருவருக்குத் தலா ரூ.60,000 வீதமும் நேரடி மானியமாக வழங்கப்படவுள்ளது.

இந்த மானியத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் தகுதியான நபர்கள், தாங்கள் வசிக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்டச் சிறுபான்மையினர் நல அலுவலகங்களை நேரில் அணுகிக் கட்டணமின்றி விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க எதிர்வரும் 2027ஆம் ஆண்டு ஜனவரி 31-ஆம் தேதி இறுதி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால், சேப்பாக்கம், சென்னை - 600 005 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும். தகுதியான நபர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தித் தங்களது விண்ணப்பங்களை உரிய காலக்கெடுவிற்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.