பள்ளிக்கரணை அருகே ரூ.2,000 கோடி கட்டுமான திட்டத்திற்கு அனுமதி ரத்து - தமிழக அரசு
சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த 'ராம்சார்' ஈரநிலமாக அறிவிக்கப்பட்டுள்ள சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதிக்கு மிக அருகில், பிரம்மாண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்காக முந்தைய திமுக அரசால் வழங்கப்பட்டிருந்த சுற்றுச்சூழல் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை, சென்னை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொள்ளாமல், அதன் எல்லைக்கு மிக அருகில் 'பிரிகேட் மார்கன் என்ற தனியார் நிறுவனம் சார்பில் ஒரு பிரம்மாண்ட கட்டுமான திட்டத்திற்கு முந்தைய ஆட்சியில் வழிவகை செய்யப்பட்டது.
சுமார் 2,000 கோடி ரூபாய் மதிப்பில், 1,250 சொகுசு அடுக்குமாடி வீடுகள் மற்றும் உயரமான குடியிருப்பு கோபுரங்களை அமைப்பதே இந்த பிரிகேட் மார்கன் திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தை அங்கே செயல்படுத்துவதற்காக, கடந்த 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் முந்தைய திமுக அரசு இதற்கான சுற்றுச்சூழல் அனுமதியை அவசர அவசரமாக வழங்கியிருந்தது.
ராம்சார் ஈரநில பாதுகாப்பு விதிகளின்படி, சதுப்பு நில எல்லைக்கு உட்பட்ட அல்லது அதன் அருகாமையில் உள்ள பகுதிகளில் எந்தவொரு பெரிய திட்டத்தைத் தொடங்குவதாக இருந்தாலும், மாநில ஈரநில ஆணையத்திடம் முன்அனுமதி பெறுவது சட்டப்பூர்வமாகக் கட்டாயமாகும். ஆனால், இந்த 2,000 கோடி ரூபாய் திட்டத்தை முன்மொழிந்த பிரிகேட் மார்கன் நிறுவனம், தமிழ்நாடு மாநில ஈரநில ஆணையத்திடம் உரிய தடையில்லா சான்றிதழையோ அல்லது அனுமதியையோ பெற முழுமையாகத் தவறிவிட்டது. இந்த விதிமுறை மீறல் தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் கடந்த 2025 ஜனவரியில் வழங்கப்பட்ட ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் அனுமதியையும் முழுமையாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளுக்குப் பள்ளிக்கரணை சதுப்பு நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதே முதன்மைக் காரணம் எனப் பலதரப்பட்ட புகார்கள் எழுந்து வரும் நிலையில், தவெக அரசு இந்த ரூ.2,000 கோடி பிரம்மாண்ட திட்டத்திற்குத் தடை விதித்திருப்பது நீர்நிலைகளைப் பாதுகாப்பதில் ஆளுங்கட்சியின் சுற்றுச்சூழல் அக்கறையைக் காட்டுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.