பழங்குடியின பெண் வன்கொடுமை - தமிழக அரசுக்கு தவெக கடும் கண்டனம்!
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் பகுதியில் பழங்குடியின பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூரச் சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தைக் கண்டித்து நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் திமுக அரசையும், முதலமைச்சர் மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது.
பாபநாசம் அருகே நடந்த இந்தத் துயரச் சம்பவம் தொடர்பாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் தனது கண்டனப் பதிவில், "தமிழகத்தில் குற்றங்களைக் கண்காணிக்கவோ அல்லது குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவோ நேரமில்லாமல் ஒட்டுமொத்த நிர்வாகமும் முடங்கிக் கிடக்கிறது. காவல்துறையைத் தன்வசம் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மக்களின் உயிரையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதை விடத் தனது அரசுக்கான விளம்பரங்களுக்கே அதிக முக்கியத்துவம் அளிப்பதாக விமர்சித்துள்ளது. குறிப்பாக விளிம்பு நிலை மக்களான பழங்குடியின பெண்களுக்கு எதிரான இத்தகைய வன்கொடுமைகள் நடப்பது அரசின் மெத்தனப் போக்கையே காட்டுகிறது எனத் தெரிவித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண், மர்ம நபர்களால் கடத்திச் செல்லப்பட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், நெல்லை மாவட்டப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்யக் கோரி அப்பகுதி மக்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுத் தமிழக வெற்றிக் கழகம் தற்போதைய திமுக அரசின் செயல்பாடுகளைத் தொடர்ந்து கூர்மையாக விமர்சித்து வருகிறது. இன்று ஒருபுறம் முதலமைச்சரின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடைபெற்று வரும் வேளையில், தவெக முன்வைத்துள்ள இந்த விமர்சனம் அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.