மதுபானங்கள் மீது 'சுற்றுச்சூழல், சமூக நலத் தீர்வை' வரி விதிக்க தமிழக அரசு முடிவு!

 

தமிழகத்தில் மதுபான விற்பனையின் மீது 'சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலத் தீர்வை' எனும் புதிய வரியை விதிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.

மதுபானக் கழிவுகளான கண்ணாடி பாட்டில்கள் மற்றும் நெகிழிகள் முறையாக மறுசுழற்சி செய்யப்படாததால், காடுகள், வனவிலங்குகள் மற்றும் பொது சுகாதாரத்திற்குப் பெரும் ஆபத்து ஏற்படுகிறது. சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் குறைக்கத் தகுந்த ஒழுங்குமுறை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனப் பல்வேறு நீதிமன்றத் தீர்ப்புகள் வலியுறுத்தியுள்ளன.

வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தத் தீர்வை மூலம் திரட்டப்படும் நிதி மதுபானக் கொள்கலன்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்துதல், மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சி செய்தல், மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்களை மீட்டெடுக்கும் மறுவாழ்வு திட்டங்கள் மற்றும் விழிப்புணர்வுப் பிரசாரங்கள், மதுப் பழக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதி மற்றும் வாழ்வாதார உதவிகள் வழங்குதல். காடுகள், சூழலியல் மற்றும் வனவிலங்குகளைப் பாதுகாத்து மீட்டெடுக்கும் நடவடிக்கைகள் போன்ற பணிகளுக்குப் பயன்படுத்தப்படும்.

இந்த புதிய வரி விதிப்பிற்குச் செயல்வடிவம் கொடுக்கும் வகையில், 2006-ஆம் ஆண்டு தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரிச் சட்டத்தில் தகுந்த திருத்தங்களை மேற்கொள்வதற்கான சட்டமுன்வடிவை அரசு தயாரித்துள்ளது.