தமிழகம் முழுவதும் ஆக.26-ல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
நபிகள் நாயகம் பிறந்தநாளான மிலாது நபியை முன்னிட்டு, வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி புதன்கிழமை அன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகள் (FL1), அதைச் சார்ந்த பார்கள், கிளப்புகளைச் சார்ந்த பார்கள் (FL2), ஹோட்டல் பார்கள் (FL3, FL3A/AA) மற்றும் FL11 வரை உரிமம் பெற்ற அனைத்து மதுபானக் கூடங்களும் கண்டிப்பாக மூடப்பட வேண்டும். இந்த உத்தரவை மீறி ஆகஸ்ட் 26-ஆம் தேதி சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தவெக அரசு பதவியேற்றதைத் தொடர்ந்து, பேருந்து நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு அருகில் அமைந்திருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டு, மது விற்பனையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.
வழக்கமாகத் திருவள்ளுவர் தினம் (ஜனவரி 15), குடியரசு தினம் (ஜனவரி 26), வள்ளலார் நினைவு நாள் (பிப்ரவரி), உழைப்பாளர் தினம் (மே 1), சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15), காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2) மற்றும் மிலாது நபி போன்ற குறிப்பிட்ட 8 நாட்களில் மட்டுமே டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.