உபரி மின்சாரத்தை விற்று ரூ.535 கோடி வருவாய் ஈட்டிய தமிழக அரசு!

 

 

தமிழகத்தில் நிலவி வரும் சாதகமான தட்பவெப்பநிலை காரணமாகச் சூரியசக்தி மின் உற்பத்தி கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், மாநிலத்தின் ஒட்டுமொத்த மின் தேவையையும் பூர்த்தி செய்தது போக, மீதமுள்ள உபரி மின்சாரத்தை வெளிச்சந்தையில் விற்றுத் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்  சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் கடந்த சில மாதங்களில் மட்டும் மின் வாரியத்திற்கு 500 கோடி ரூபாய்க்கும் மேல் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது.

தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்ததால், சூரியசக்தி மற்றும் காற்றாலை மூலமான பசுமை மின் உற்பத்தி வரலாறு காணாத அளவை எட்டியது. மாநிலத்தின் தினசரி மின் நுகர்வுத் தேவையைப் பூர்த்தி செய்த பிறகும், மின்சாரக் கட்டமைப்பில் உபரியாகத் தேங்கிய மின்சாரத்தைப் பவர் எக்ஸ்சேஞ்ச்மூலம் பிற மாநிலங்களுக்கு விற்பனை செய்யத் தமிழக அரசு முடிவு செய்தது.

அதன்படி, கடந்த மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையிலான மூன்று மாத காலகட்டத்தில், மொத்தம் 308 கோடி யூனிட்கள் உபரி மின்சாரம் வெளிச்சந்தையில் வெற்றிகரமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்த மின்சார விற்பனையின் போது தேசிய மின் சந்தையில் ஒரு யூனிட் மின்சாரம் சராசரியாக 2 ரூபாய் முதல் 3 ரூபாய் வரையிலான விலைக்குப் பரிமாற்றம் செய்யப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாடு மின் வாரியத்திற்குக் கூடுதலாக 535 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

கோடைக் காலத்தில் மின் தட்டுப்பாடு இன்றி மாநிலத்தின் தேவையைச் சமாளித்ததோடு மட்டுமன்றி, உபரி மின்சாரத்தை விற்று இவ்வளவு பெரிய தொகையை வருவாயாக ஈட்டியிருப்பது மின் வாரியத்தின் நிதி நெருக்கடியைச் சற்றே குறைக்க உதவும் என அதிகாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் முறையான மின் மேலாண்மை காரணமாகவே இந்த அசாத்திய சாதனை சாத்தியமாகியுள்ளது.