மூன்றே மாதங்களில் தமிழக அரசுக்கு ரூ.64,944 கோடி வருவாய் - மத்திய தணிக்கைத் துறை தகவல்!

 

நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களில் (ஏப்ரல் முதல் ஜூன் வரை) தமிழக அரசுக்கு வரி, வரி அல்லாத வருவாய் மற்றும் மானியம் என மொத்தமாக ரூ. 64,944.97 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக மத்திய தணிக்கைத் துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் (ஏப்ரல் - ஜூன்) தமிழக அரசின் மொத்த வருவாய் ரூ. 63,755.70 கோடியாக இருந்தது. இந்த ஆண்டு அது ரூ. 1,189.27 கோடி அதிகரித்து உயர்ந்துள்ளது. மாநிலச் சரக்கு மற்றும் சேவை வரி (SGST), முத்திரைத்தாள் பதிவுக் கட்டணம், விற்பனை வரி, ஆயத்தீர்வை வரி ஆகியவை மூலம் மட்டுமே ரூ. 60,061.72 கோடி வருமானம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டில் இது ரூ. 56,366.76 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கட்டணங்கள் மற்றும் இதர சேவைகள் வாயிலாகக் கிடைக்கும் வரி அல்லாத வருவாயாக ரூ. 3,172 கோடி ஈட்டப்பட்டுள்ளது.

மாநிலத்தின் சொந்த வரி வருவாய் அதிகரித்துள்ள போதிலும், மத்திய அரசிடமிருந்து கிடைக்கும் நிதி உதவி கணிசமாகக் குறைந்துள்ளது: கடந்த நிதியாண்டின் முதல் 3 மாதங்களில் மத்திய அரசிடமிருந்து ரூ. 4,493.23 கோடி மானியமாகக் கிடைத்த நிலையில், நடப்பு நிதியாண்டில் அது ரூ. 1,710 கோடியாகச் சரிந்துள்ளது.

மாநிலத்தின் சொந்த வரி வருவாய் சீரான வளர்ச்சியைக் கண்டு வருவது, தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் கட்டமைப்பு சார்ந்த மேம்பாட்டுப் பணிகளைத் தொய்வின்றிச் செயல்படுத்தப் பெரும் உறுதுணையாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.