நெல், அரிசி இருப்புக்கு உச்ச வரம்பு நிர்ணயித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு! 

 

தமிழ்நாட்டில் நெல் மற்றும் அரிசி விநியோகத்தைச் சீராகப் பராமரிக்கவும், பதுக்கல் மற்றும் செயற்கையான விலையேற்றத்தைத் தடுக்கவும் ஏதுவாக அவற்றின் இருப்புக்கு உச்ச வரம்பு நிர்ணயித்துத் தமிழக அரசு இன்று (நவம்பர் 14) முக்கிய அரசாணை வெளியிட்டுள்ளது. இந்தப் புதிய கட்டுப்பாடுகள் 2027-ஆம் ஆண்டு ஜனவரி 31-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள இந்த அரசாணையின்படி, ஒவ்வொரு பிரிவினரும் வைத்துக்கொள்ளக்கூடிய அதிகபட்ச நெல் மற்றும் அரிசி இருப்பின் அளவு தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.

மொத்த விற்பனையாளர்கள் அதிகபட்சமாக 2,000 மெட்ரிக் டன் வரை மட்டுமே நெல் மற்றும் அரிசியை இருப்பு வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர். சில்லறை விற்பனையாளர்கள் தங்களது கடைகளில் அதிகபட்சமாக 3 மெட்ரிக் டன் வரை இருப்பு வைத்துக் கொள்ளலாம்.

பெரிய சங்கிலித் தொடர் விற்பனை நிலையங்கள் தங்களது கிளைக் கடைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒவ்வொரு கடைக்கும் தலா 8 மெட்ரிக் டன் வரை இருப்பு வைத்துக் கொள்ளலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அரிசி ஆலை உரிமையாளர்கள் தங்களது ஆலையின் ஒரு மாத உற்பத்தித் திறனுக்கு மிகாமல் மட்டுமே நெல் மற்றும் அரிசியை இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும். வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்பவர்கள், சுங்க அனுமதி பெற்ற நாளிலிருந்து 45 நாட்களுக்கு மேல் சரக்குகளை இருப்பு வைத்திருக்கக் கூடாது எனக் கடுமையான நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

பதுக்கலைத் தடுக்கவும், சந்தையில் அரிசி தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும் வணிக நிறுவனங்களுக்குக் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தற்போது நிர்ணயிக்கப்பட்ட உச்ச வரம்பை விட அதிகமாக நெல் மற்றும் அரிசியை இருப்பு வைத்திருக்கும் வணிக நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள், வரும் நவம்பர் 16-ஆம் தேதிக்குள் தங்களது இருப்பை நிர்ணயிக்கப்பட்ட அளவுக்குள் குறைத்துக் கொள்ள வேண்டும் என அரசாணையில் திட்டவட்டமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து வணிக நிறுவனங்கள் மற்றும் சட்டப்பூர்வ அமைப்புகள் தங்களது உண்மையான இருப்பு விவரங்களை மத்திய நுகர்வோர் விவகாரத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான fcainfoweb.nic.in என்ற தளத்தில் தவறாமல் பதிவேற்றம் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருளான அரிசி தடையின்றி நியாயமான விலையில் கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த அரசாணை, வரும் 2027 ஜனவரி 31-ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.