பெண்களுக்கு ரூ.5 கோடி வரை கடன் உதவி - தமிழக அரசு வழிகாட்டுதல்கள் வெளியீடு! 

 

தமிழகத்தில் பெண் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களின் பொருளாதாரப் பலத்தை மேம்படுத்தும் நோக்கிலும் 'வெற்றி மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்' தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்களைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.5 கோடி வரை கடனுதவி வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டின் அனைத்து 234 தொகுதிகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

ஒவ்வொரு தொகுதியிலும் தொழில் தொடங்க ஆர்வமுள்ள மற்றும் திறமையான 10 பெண்களைத் தேர்ந்தெடுத்து அவர்களின் விண்ணப்பங்களை அனுப்புமாறு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மகளிர் தொழில்முனைவோரால் தொடங்கி நடத்தப்பட்டு, குறைந்தபட்சம் 51 சதவீத பங்குரிமையைக் கொண்டுள்ள தனியுரிமை, ஒரு நபர் நிறுவனங்கள், கூட்டாண்மை நிறுவனங்கள் மற்றும் தனியார்/பொதுத்துறை நிறுவனங்கள் இதற்குத் தகுதியானவை.

உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் புதிய தொழிற்சாலைகளை நிறுவுதல், ஏற்கனவே உள்ளவற்றை விரிவுபடுத்துதல், நிலம் வாங்குதல், கட்டிடங்கள் கட்டுதல் மற்றும் புதிய இயந்திரங்கள் வாங்குதல் போன்றவற்றுக்கு இக்கடன் உதவி பயன்படுத்தப்படலாம்.

புதிய நிறுவனங்களுக்குத் திட்டச் செலவில் 20 சதவீதமும், ஏற்கனவே இயங்கி வரும் நிறுவனங்களுக்குத் திட்டச் செலவில் 15 சதவீதமும் பயனாளர்களின் பங்களிப்புத் தொகையாக இருக்க வேண்டும்.

தற்போதைய நிலவரப்படி ஆண்டுக்கு 9.95 சதவீத வட்டி வசூலிக்கப்படுகிறது. இந்த கடனை 2 ஆண்டுகள் வரையிலான ஒத்திவைப்புக் காலம் உட்பட 9 ஆண்டுகள் வரை மாதத் தவணையாகத் திருப்பிச் செலுத்தலாம்.

MSME தரவரிசை 7-க்குள் இருக்க வேண்டும்; தனிநபர் சிபில் மதிப்பெண் 600-க்கு மேல் இருக்க வேண்டும். புதிய மற்றும் 3 ஆண்டுகளுக்குள் இயங்கும் நிறுவனங்களுக்குக் கடன் தொகையில் 40 சதவீதமும், 3 ஆண்டுகளுக்கு மேல் இயங்கும் நிறுவனங்களுக்கு 20 சதவீதமும் அசையாச் சொத்து வடிவத்தில் பிணையம் அளிக்க வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்படும் கடன்களுக்கு ஆய்வுக் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முதல்முறை தொழில்முனைவோருக்குத் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலம் உரிய தொழில் பயிற்சியும் அளிக்கப்படும்.