இன்று ஒரே நாளில் தமிழக அரசுக்கு ரூ.150 கோடி வரை வருவாய் இழப்பு - டாஸ்மாக் விவகாரத்தில் மீண்டும் சர்ச்சை!
தமிழ்நாடு அரசு இன்று முதல் அமல்படுத்திய காலி மது பாட்டில் திரும்பப் பெறும் திட்டத்தில் ஊழியர்கள் முறையான ஒத்துழைப்பு அளிக்காமல் கடைகளை அடைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டதால், மாநில அரசுக்கு ஒரே நாளில் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களுக்கு எம்.ஆர்.பி.விலைக்கு மேல் கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுவதைத் தடுக்கவும் முறைகேடுகளை ஒழிக்கவும் அரசு புதிய விதிகளைக் கொண்டு வந்தது. இதன்படி, இனி அந்த ரூ.10 கட்டணம் எம்.ஆர்.பி. விலைக்குள்ளேயே 'சுற்றுச்சூழல் மற்றும் சமூக நல வரி' என்ற பெயரில் சேர்க்கப்படும். பொதுமக்கள் காலியான மது பாட்டில்களை எந்தக் கடையில் திரும்பக் கொடுத்தாலும், க்யூ ஆர் கோடு ஸ்கேன் செய்யப்பட்டு ரூ.10 திரும்ப வழங்கப்படும் என அரசு தெளிவுபடுத்தியிருந்தது.
"காலி பாட்டில்களை வைக்க போதிய இடம் இல்லை, போதுமான ஆட்கள் இல்லை, க்யூ ஆர் கோடு சரிவர ஸ்கேன் ஆகவில்லை" உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் கூறித் தமிழகம் முழுவதும் இன்று பல இடங்களில் டாஸ்மாக் ஊழியர்கள் கடைகளைத் திறக்காமல் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தான் டாஸ்மாக் விற்பனை உச்சத்தில் இருக்கும். இத்தகைய சூழலில், இன்று ஊழியர்கள் கடைகளை அடைத்துப் போராட்டம் நடத்தியதால் அரசுக்கு ஒரே நாளில் ரூ.100 கோடி முதல் ரூ.150 கோடி வரை மிகப்பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அரசின் சுற்றுச்சுழல் மற்றும் சீர்திருத்த நடவடிக்கைக்கு எதிராக ஊழியர்கள் கடையடைப்பில் ஈடுபட்டிருப்பது மதுப்பிரியர்கள் மத்தியிலும் அரசு வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.