புறம்போக்கு நிலங்களில் அமைந்துள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு - தமிழக அரசு உத்தரவு!
தமிழகத்தில் புறம்போக்கு நிலங்களில் அமைந்துள்ள சிறிய அளவிலான குடியிருப்புகளுக்குத் தடையில்லாச் சான்றிதழ் பெறாமலேயே புதிய மின் இணைப்பு வழங்குவதற்கான உத்தரவைத் தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
புறம்போக்கு நிலங்களில் முறையான அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ள 250 சதுர அடி வரையிலான சிறிய வீடுகளுக்கு, இனி எந்தவிதத் தடையில்லாச் சான்றிதழும் இல்லாமல் எளிதில் மின் இணைப்பு பெற்றுக்கொள்ளலாம் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்தச் சலுகையானது அனைத்துப் புறம்போக்கு நிலங்களுக்கும் பொருந்தாது. குறிப்பாக, நீர்நிலை மற்றும் வனப் புறம்போக்கு நிலங்களில் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு இந்த மின் இணைப்பு வழங்கப்படாது.
மேலும், ரயில்வே துறைக்குச் சொந்தமான புறம்போக்கு நிலங்கள் மற்றும் கோவில் நிலங்களில் அமைந்துள்ள ஆக்கிரமிப்பு வீடுகளுக்கும் இந்தச் சலுகை பொருந்தாது என்று தமிழக அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இதன் மூலம் உரிய விதிமுறைகளுக்கு உட்பட்ட எளிய குடியிருப்புகளுக்கு மட்டும் மின் வசதி கிடைக்கும் வாய்ப்பை அரசு ஏற்படுத்தித் தந்துள்ளது.