"உரிமம் இல்லாத கடைகளில் ஃபுட் ரிவ்யூ செய்யக் கூடாது" - தமிழக அரசு உத்தரவு!

 

தமிழ்நாட்டில் சமூக வலைத்தளங்களில் 'ஃபுட் ரிவ்யூ' செய்யும் யூடியூபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை புதிய கட்டுப்பாடுகளையும் கடுமையான வழிகாட்டுதல்களையும் அறிவித்துள்ளது.

புதிய வழிகாட்டுதல்களின்படி, ஃபுட் ரிவ்யூ செய்யும் யூடியூபர்கள் தாங்கள் விரும்பும் அனைத்துக் கடைகளிலும் இனி நினைத்த மாத்திரத்தில் வீடியோக்களை எடுத்துவிட முடியாது. உணவுப் பாதுகாப்புத் துறையின் முறையான அங்கீகாரம் மற்றும் உரிமம் பெற்ற கடைகளில் மட்டுமே இனி யூடியூபர்கள் வீடியோக்களை எடுக்க வேண்டும்.

யூடியூபர்களின் பொறுப்பு: வீடியோ எடுக்கச் செல்வதற்கு முன்பாக, சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு முறையான அரசு உரிமம் உள்ளதா என்பதை யூடியூபர்கள் தங்களின் சொந்தப் பொறுப்பில் கட்டாயம் சரிபார்க்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுமதி பெற்ற கடைகளாக இருந்தாலும், அங்குள்ள சமையலறை மற்றும் ஊழியர்களின் சுகாதாரம் மிக முக்கியம் என அரசு உத்தரவிட்டுள்ளது.

கடைகளில் பணியாற்றுபவர்கள் தலைக்கவசம், கையுறை அணிந்து முறையாகச் சுகாதாரமான முறையில் உணவுப் பணிகளை மேற்கொள்கிறார்களா என்பதை வீடியோ எடுப்பவர்கள் கவனிக்க வேண்டும்.  உணவகங்களின் தரம் மற்றும் தூய்மையை முழுமையாக உறுதிசெய்த பின்னரே அந்த வீடியோக்களை இணையதளங்களில் வெளியிட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. உரிமம் இல்லாத மற்றும் சுகாதாரமற்ற கடைகளை விளம்பரப்படுத்தும் வகையில் வீடியோக்கள் வெளியிட்டால், சம்பந்தப்பட்ட யூடியூபர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை பாயும் எனத் தெரிகிறது.

பிரபல யூடியூபர்களின் ரிவ்யூக்களைப் பார்த்துவிட்டுப் பொதுமக்கள் பலரும் குறிப்பிட்ட உணவகங்களைத் தேடிச் சென்று சாப்பிடுவதால், விளம்பர மோகத்தில் தரமற்ற உணவகங்கள் ஊக்குவிக்கப்படுவதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உணவுப் பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.